துணை ராணுவப் படையினர் 4 பேர் பலி: மாவோயிஸ்டுகள் தாக்குதலுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் கண்டனம்

மாவோயிஸ்டுகள் பயிற்சி முகாம் | பிரதிநிதித்துவப் படம்
மாவோயிஸ்டுகள் பயிற்சி முகாம் | பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

ஜார்க்கண்டில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வேன் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் துணை ராணுவப் படையினர் 4 பேர் பலியானதாக இன்று காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்கு ஜார்க்கண்ட் முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டிருப்பதால் அங்கு போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினரின் தேடுதல் வேட்டையும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றிரவு மாவோயிஸ்டுகளின் தாக்குதலுக்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட துணை ராணுவப் படையினர் பலியானது குறித்து காவல்துறை கூறியுள்ளதாவது:

''வெள்ளிக்கிழமை இரவு லதேஹர் மாவட்டத்தில் ஒரு லூகியாட் அருகே துணை ராணுவப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இக்கிராமம் சந்தவா காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது. அப்போது, ரோந்துப் பணியில் இருந்த வேன் மீது மாவோயிஸ்டுகள் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டனர்.

இந்தத் தாக்குதலில் வேனில் இருந்த துணை ராணுவப் படையினர் 4 பேரை அவர்கள் கொன்றுள்ளனர். ஏ.எஸ்.ஐ. சுக்ரா ஓரான் மற்றும் துணை ராணுவப் படையைச் சேர்ந்த ஜவான்கள் சிக்கந்தர் சிங், ஜமுனா பிரசாத் மற்றும் சம்பு பிரசாத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இவர்களுடன் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த மற்றொரு ஜவான், இயற்கை உபாதை காரணமாக சற்று தள்ளி இருந்த நேரத்தில் அவர் உயிர் தப்பினார்''.

இவ்வாறு காவல்துறை தெரிவித்துள்ளது.

ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபார் தாஸ் இந்தத் தாக்குதலைக் கண்டித்து, துணை ராணுவப் படையினர் 4 பேர் இறந்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in