

புதிதாக அமைந்த நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர்களில் தமிழக எம்.பிக்கள் தமிழில் பேசுவது அதிகரித்தது. இவர்கள் வழியை கடைப்பிடித்து, மேற்கு வங்க மாநிலத்தின் தம் எம்.பிக்களுக்கும் தம் தாய்மொழியான வங்க மொழியில் பேச பாஜக அறிவுறுத்தி வருகிறது.
பதினேழாவது நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக எம்.பிக்களில் பலரும் மக்களவையில் தமிழ் மொழியில் பேசி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் பதவி ஏற்ற போது தமிழில் பேசி உறுதிமொழி எடுத்ததில் கிடைத்த வரவேற்பினால் இது அதிரிகரித்தது.
மக்களவையில் மற்றவர்கள் பேசும் இந்தி மொழியை உடனடியாக தமிழில் மொழிபெயர்க்கும் வசதி வேண்டும் எனவும் சபாநாயகரிடம் தமிழக எம்.பிக்கள் வலியுறுத்தி இருந்தனர். தம் தமிழ் மொழி மீதான நடவடிக்கைகளுக்கு தமிழகத்தில் பெரும் ஆதரவும் கிடைப்பதாகக் கருதப்பட்டி இது தொடர்கிறது.
இதற்கிடையே, தமிழக எம்.பிக்களின் தமிழ் மொழி நடவடிக்கைகளை மேற்கு வங்க மாநில பாஜக எம்.பிக்களும் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். இம்மாநிலத்தில் முதன்முறையாக பாஜகவிற்கு 18 எம்.பிக்கள் கிடைத்துள்ளனர்.
இவர்களில் பலரும் இந்தி மொழி அறியாமல் தவித்து வருகின்றனர். இதனால், அவர்களால் மக்களவையின் நடவடிக்கைகளில் ஆங்கிலத்திலும், அதை அறியாதவர்கள் எழுதியும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜகவின் 18 எம்.பிக்களுக்கும் வங்க மொழியில் பேச அவர்கள் தலைமையும் அனுமதித்து விட்டதாகக் கருதப்படுகிறது. இதன் பின்னணியில் அம்மாநிலத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் ஒரு முக்கியக் காரணம் ஆகும்.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் ஆளும் அதன் தலைவி மம்தா பானர்ஜியும் பெங்காலி மொழிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இதனால், தம் எம்.பி.க்களும் மக்களவையில் இந்திக்கு பதிலாக அவர்களது பெங்காலில் மொழியில் பேசினால் மம்தாவின் அரசியலை எதிர்கொள்ள முடியும் என நம்புகிறது.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பாஜகவின் மேற்கு வங்க மாநில எம்.பி.க்கள் வட்டாரம் கூறும்போது, ‘பெங்காலி மொழியில் பேசும் அனுமதியால், ஆங்கிலமும், இந்தியும் அறியாத பலருக்கும் பெரிய நிம்மதி கிடைத்துள்ளது.
பலரும் மக்களவை தேர்தல் வெற்றிக்கு பின் இந்தி மொழிக்கானப் பயிற்சி பெற்று வந்தனர். சிலர் இந்தியை பெங்காலில் எழுத்துக்களில் எழுதி படித்து சமாளித்தனர்.
தமிழக எம்.பிக்கள் போல் தாய்மொழியில் பேசுவதால் அது நம் மாநிலத்தில் வாக்குபெற உதவியாக இருக்கும் என்பது எங்கள் தலைமைக்கு இப்போது தான் புரிந்துள்ளது.’ எனத் தெரிவித்தனர்.
இதுபோல், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் மேற்கு வங்க மாநில அரசியல்வாதிகளுக்கும் இந்தி மொழி பெரும் பிரச்சனையாக இருந்த காலம் உண்டு. ஆங்கிலம் தெரிந்தமையால் அதன் மூத்த தலைவராக இருந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஆங்கிலம் தெரிந்தமையால் சிக்கல் எழவில்லை.
பிறகு இந்தி மொழியையும் கற்று பலன் அடைந்தார். இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பெருந்தலைவர்களான பிரமோத்தாஸ் குப்தா, பீமன் போஸ் உள்ளிட்டப் சிலருக்கும் தம் கட்சியின் டெல்லி கூட்டங்களில் இந்தி மொழி சவாலாக இருந்துள்ளது.
இது குறித்து பாஜக தலைமையகத்தில் ‘இந்து தமிழ்’ நாளேடு விசாரித்த போது, ’இந்தி தெரியாதமையால் தான் இந்த முடிவே தவிர அதில், மொழி அரசியல் எதுவும் கிடையாது’ எனத் தெரிவித்தவர்கள் தம் பெயர்களை குறிப்பிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டனர்.