

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பமாக பாஜக,தேசியவாத கூட்டணி அமைந்து ஆட்சி அமைந்துள்ள நிலையில், இந்த கூட்டணி சரத்பவார் சம்மத்துடன் உருவானதா என்ற கேள்வி எழுந்துள்ளது
மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இரு கட்சிகளும் தேர்தலுக்குப்பின் பின் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில், மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் பாஜகவுடன் 35 ஆண்டுகள் தொடர்ந்த கூட்டணியை சிவசேனா முறித்தது. ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தும் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளால் முடியாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
பாஜகவுடன் கூட்டணியை முறித்ததில் இருந்தே தங்களுக்கு 170 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது கூறிய சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்து காய்களை நகர்த்தியது. சித்தாந்த ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் எதிர் துருவங்களாக இருக்கும் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் சிவசேனாவுடன் இணைவார்களா என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
ஆனால், பலகட்டப் பேச்சுக்குப்பின் குறைந்த செயல் திட்டத்தைத் தீட்டி ஆட்சி அமைக்கும் பணியில் மூன்று கட்சிகளும் ஈடுபட்டன. பலசுற்றுப்ப பேச்சுக்குப்பின் நேற்று இரவு சிவசேனா, காங்கிரஸ் என்சிபி இடையே இறுதி முடிவு எட்டியதாக தெரிவிக்கப்பட்டது இன்று 3 கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைக்க ஆளுநரிடம் கோருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக வருவார். அதற்கு காங்கிரஸ், என்சிபி சம்மதித்துவிட்டோம் என சரத்பவாரும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால், திடீர் திருப்பமாக நள்ளிரவுக்குள் நடந்த மாற்றமாக பாஜக, என்சிபி இடையே கூட்டணி அமைந்து இன்று காலை ஆட்சி அமைக்கப்பட்டது.
மகாராஷ்டிரா முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவி்ஸ் 2-வது முறையாகவும், துணை முதல்வராக என்சிபி தலைவரும், சரத்பவாரின் சகோதரருமான அஜித் பவாரும் பதவி ஏற்றனர்.
அஜித் பவார் மீது அமலாக்கப்பிரிவு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவர் தன்னிட்சையாக இந்த முடிவை எடுத்திருப்பார்,பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முன்வந்திருப்பார் என்று முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால், என்சிபி தலைவர் சரத் பவார் சம்மதத்துடன்தான் இந்த கூட்டணி உருவாகியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டது
மேலும், நேற்று நள்ளிரவு பாஜக தலைவர்களுடன் நடந்த பேச்சு வார்த்தையில் அஜித் பவாருடன் சரத் பவாரும் பங்கேறுள்ளார். அவரின் சம்மத்தின் பெயரில்தான் பாஜகவுக்கு என்சிபி ஆதரவு அளித்துள்ளது என்றும் செய்திகள் தெரிவித்தன.
ஆனால், பாஜக-என்சிபி கூட்டணி அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு அதில் சரத் பவாருக்கு உடன்பாடில்லை என்று தற்போது தெரியவந்துள்ளது.
ஆனால் என்சிபி கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் படேல் கூறுகையில், “ பாஜகவுக்கு என்சிபி ஆதரவு தருவது என்பது நிச்சயம் சரத் பவார் முடிவாக இருக்காது. இதற்கு என்சிபி முடிவாகவும் இருக்காது” என்று புதிர்போட்டுள்ளா். இதனால், சரத் பவார் ஒப்புதல் இல்லாமல் அஜித் பவார் துணை முதல்வராக பதவி ஏற்றாரா என்ற சந்தேகமும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இதுகுறித்து சரத் பவார் கூறுகையில், “ பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது என்பது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு. இதற்கு ஒருபோதும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை. பாஜகவுக்கு ஆதரவு என்பதை ஒருபோதும் ஆதரிக்கமாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனால், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால், அஜித் பவார் தனி அணியாக தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் கட்சியை உடைப்பாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி பேசுகையில், நாடாளுமன்றத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என சரத்பவார் தலைமையிலான என்சிபி, பிஜு ஜனதா தளம் கட்சிகளிடம் கேட்டு அறிய வேண்டும் என சரத் பவாரை புகழ்ந்துபேசினார். மேலும் பிரதமர் மோடியின் பேச்சுக்குப்பின், என்சிபி தலைவர் சரத் பவார் பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பும் பலவாறு ஊகங்களை எழுப்பியது குறிப்பிடத்தக்ககது