Published : 23 Nov 2019 07:56 AM
Last Updated : 23 Nov 2019 07:56 AM

யார் முட்டுக்கட்டை போட்டாலும் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்கும்: தென்காசி மாவட்ட தொடக்க விழாவில் முதல்வர் பழனிசாமி உறுதி

திருநெல்வேலி

`யார் முட்டுக்கட்டை போட்டாலும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும்' என்று புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தென்காசி மாவட்ட தொடக்க விழாவில் முதல்வர் பழனிசாமி உறுதி தெரிவித்தார்.

தென்காசியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் பேசியதாவது:தென்காசி மக்களின் 33 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று, இந்த புதிய மாவட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இயற்கையான சூழலில் இந்த மாவட்டம் இருக்கிறது. பொதிகைமலை, தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில், சங்கரன்கோவில் ஆடி தபசு உள்ளிட்டவை தென்காசி மாவட்டத்தின் சிறப்புகள். தென்காசி நகரம் இந்த மாவட்டத்தின் தலைநகரம். இங்குள்ள செண்பகவல்லி அணைக்கட்டு பிரச்சினை தொடர்பாக கேரள முதல்வரை சந்தித்து பேசிவந்துள்ளேன். அதை தீர்த்துவைக்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதற்கும், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. 2018-ல் செய்யப்பட்ட வார்டு மறுவரையறை அடிப்படையில் இத்தேர்தல் நடத்தப்படும். சிலர் இதற்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். எந்த முட்டுக்கட்டை போட்டாலும் மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்தும்.

கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக வரவேண்டும் என்பதற்காக 1996-ல் மறைமுக தேர்தலை கொண்டுவந்தனர். 2006-ல் அதை மீண்டும் மாற்றி அமைத்ததும் திமுகதான். மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என்று சொல்வார்கள். அப்படிதான் ஸ்டாலின் பேசிவருகிறார். பொய்யான தகவல்களை கூறி உள்ளாட்சி தேர்தலை நிறுத்த ஸ்டாலின் முயற்சிக்கிறார்.

சாதனை படைக்கும் அரசு

கடந்த 8 ஆண்டுகளில் வேளாண் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 12 அரசு கலைக்கல்லூரிகளையும், 5 பாலிடெக்னிக் கல்லூரிகளையும் தொடங்கி சாதனை படைத்த அரசாக அதிமுக அரசு உள்ளது. உயர்கல்வியில் படிக்கும் மாணவ, மாணவர்களின் சதவீதம் நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகம். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி ரூ. 3 லட்சத்து 438 கோடி முதலீட்டை ஈர்த்தோம். 304 புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தந்துள்ளோம்.

குடிமராமத்து திட்டத்தில் நீராதாரங்களை தூர்வாரியதால் தற்போது மழை நீர் வீணாகாமல் சேமிக்கப்பட்டிருக்கிறது. வரும் காலத்திலும் இத்திட்டம் தொடரும்.

கடந்த 3 ஆண்டுகளில் சட்டப் பேரவையில் 110 விதியின்கீழ் அறிவித்த 453 அறிவுப்புகளில், 368 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிட்டுள்ளது. 88 அறிவிப்புகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. முதல்வர் சிறப்பு குறைதீர் திட்டம் மூலம், 9.72 லட்சம் மனுக்களை பெற்றுள்ளோம். அதில் 5.11 லட்சம் மனுக்கள் ஏற்கப்பட்டு கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாஜகவுடன் கூட்டணி

பாஜகவுடன் கூட்டணி அமைத்து 5 மாதம் ஆகிறது. இக்காலத்தில் மத்திய அரசை வலியுறுத்தியதால், ஒரே நேரத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், விருதுநகர் என 6 மருத்துவக் கல்லூரிகளை அதிமுக அரசு தமிழகத்துக்கு கொண்டுவந்திருக்கிறது. இந்த கல்லூரிகளில் 900 மாணவர்கள் படிக்க இருக்கிறார்கள். இதுபோல், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகளை தொடங்க மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்ததால் இந்த பெரிய திட்டத்தை பெறமுடிந்தது.

ஆனால், திமுக மத்திய ஆட்சியில் அங்கம்வகித்தபோது தமிழகத்துக்கு எந்த திட்டத்தை கொண்டு வந்தீர்கள்? எவ்வளவு நிதியை பெற்றுத்தந்தீர்கள்? எதுவுமே இல்லை. குடும்பம்தான் வளர்ந்தது, குடும்பம்தான் பதவி சுகத்தை பெறமுடிந்தது. ஆனால், அதிமுக அப்படியல்ல. தமிழக மக்களுக்கு நன்மை தரும் மத்திய அரசின் திட்டங்களை ஆதரிப்போம். தீமை தரும் திட்டம் எதுவாக இருந்தாலும் எதிர்ப்போம் என்றார் முதல்வர்.

புதிய மாவட்டம் தொடக்க விழாவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தலைமைச் செயலாளர் க.சண்முகம் வரவேற்றார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா திட்ட விளக்கவுரையாற்றினார். மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண்சுந்தர் தயாளன் நன்றி கூறினார்.

33-வது புதிய மாவட்டம் தென்காசி

தென்காசி மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கேரளா, கிழக்கு மற்றும் தெற்கு எல்லையாக திருநெல்வேலி மாவட்டம், வடக்கு எல்லையாக விருதுநகர் மாவட்டம் உள்ளது. தென்காசி சங்கரன்கோவில் ஆகிய இரண்டு கோட்டங்கள், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், வீரகேரளம்புதூர், ஆலங்குளம், சங்கரன்கோவில், சிவகிரி, திருவேங்கடம் ஆகிய 8 வருவாய் வட்டங்கள், 251 வருவாய் கிராமங்கள் புதிய மாவட்டத்தில் உள்ளன. தென்காசி மாவட்டத்தின் பரப்பளவு 2,916.13 சதுர கி.மீ. ஆகும். மக்கள் தொகை 14 லட்சத்து 7 ஆயிரத்து 627 பேர். கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை ஆகிய நகராட்சிகளும், 10 ஊராட்சி ஒன்றியங்களும், அவற்றில் 224 கிராம ஊராட்சிகளும் உள்ளன.

தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ஆலங்குளம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் இம்மாவட்டத்தில் அடக்கம். தென்காசி மக்களவைத் தொகுதி முழுமையாகவும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியும் தென்காசி மாவட்டத்தில் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x