மும்பை மேயர், துணை மேயர் தேர்தல்: சிவசேனா வேட்பாளர்கள் தேர்வு

மும்பை மேயர், துணை மேயர் தேர்தல்: சிவசேனா வேட்பாளர்கள் தேர்வு
Updated on
1 min read

மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனா சார்பில் மேயராக கிஷோரி பெட்னேகரும், துணை மேயராக சுகாஸ் வாட்கரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட சிக்கலால், சிவசேனா, பாஜக கூட்டணி முறிந்தது. இதைத் தொடர்ந்து எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழலில் மும்பை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

மேயர் தேர்தலில் வெற்றி பெற தேவையான பலம் இல்லாததால், போட்டியிடப்போவதில்லை எனக் கூறி பாஜக ஒதுங்கிக் கொண்டது. அதுபோலவே சிவசேனாவுடன் சேர்ந்து மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் மேயர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்தன.

வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், நேரம் முடிவடைவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாக திடீரென சிவசேனாவை சேர்ந்த கிஷோரி பெட்னேகரும், சுகாஸ் வாட்கரும் மனுத்தாக்கல் செய்தனர். வேறு யாரும் போட்டியிடாததால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியானது.

இந்தநிலையில் மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனா சார்பில் மேயராக கிஷோரி பெட்னேகரும், துணை மேயராக சுகாஸ் வாட்கரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மும்பை பரேல் பகுதியின் கவுன்சிலரான கிஷோரி கட்சியின் இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரேயின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in