

2019 மக்களவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை விவிபாட் சீட்டுகளுடன் ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி என டெல்லி நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது, 50 சதவீத மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை விவிபாட் இயந்திரங்களில் பதிவாகும் வாக்காளர் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும் என்று தேர்தலுக்கு முன்பிருந்தே தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இதுதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின்படி ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட ஆறு வாக்குச்சாவடிகளில் வாக்கு எண்ணிக்கையை விவிபாட் சரிபார்ப்பு சீட்டு மூலம் ஒப்பிட்டு பார்க்கலாம் என உத்தரவிடப்பட்டது.
மீண்டும் எதிர்க்கட்சிகள் வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறிவந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறைகளில் வைக்கப்படும் எனவும் வாக்குகள் எண்ணும் பணி நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் செய்யப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளிடம் உறுதி அளித்தது.
இந்நிலையில் சமூக ஆர்வலர் ஹானஸ்ராஜ் ஜெயின் தாக்கல் செய்த மனுவில் வி.வி.பி.ஏ.டி காகித சீட்டுகளை ஆய்வு செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹானஸ்ராஜ் ஜெயின் தாக்கல் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பெரும்பான்மையான தொகுதிகளில் வாக்களிக்கப்பட்ட மற்றும் எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையில் பெரிய முரண்பாடுகள் உள்ளது. தேர்தல் ஆணையத்தில் இணைய தளத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள்படி 373 தொகுதிகள் குறித்த புள்ளிவிவரங்கள் மட்டுமே காணக்கிடைக்கின்றன. இதிலும் வாக்குப் பதிவு எண்ணிக்கைக்கும் எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் முரண்பாடுகள் உள்ளன.
வெளிப்படையான தேர்தல் நடத்துவதற்காக 16,15,000 எண்ணிக்கையிலான விவபாட் இயந்திரங்களை வாங்குவதற்காக ரூ.3173.47 கோடி ஒதுக்கியது. ஆனால் இந்த வாக்கு சரிபார்ப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவில்லை.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனு மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.