

வெளிநாடுகளின் கல்வி நிறுவனங்களில் சித்தமருத்துவம் மீதான இருக்கை அமைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது என அமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் தெரிவித்தார்.
மக்களவையில் இன்று மதுரை தொகுதி எம்.பி.யான சு.வெங்கடேசன் கேள்விக்கு மத்திய ஆயுஷ் (ஆயுர்வேதா, யோகா, இயற்கை வைத்தியம், யுனானி, சித்தா மற்றும் ஆங்கில மருத்துவம்) துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘சிங்கப்பூர் தேசிய நல ஆய்வுக்கான கழகத்திலும்,சிங்கப்பூர் சித்த மருத்துவர்கள் கூட்டமைப்பிலும், மலேசியா "மாக்சா" பல்கலைக்கழகத்திலும் தொடர்பு கொண்டு, "சித்தா இருக்கை" அமைக்க விவரங்கள் சேகரிக்க இந்திய அரசின் மத்திய சித்த ஆராய்ச்சி கழகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அங்கிருந்து விருப்ப கோரிக்கை வந்ததும் மத்திய சித்தா கவுன்சில் அதற்கான நடவடிக்கையில் இறங்கும். இதுபோல், மத்திய அரசின் ஆயுஷ் துறை உலகெங்கும் ஆயுஷ் இருக்கைகளை அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. சித்தா இருக்கைகான விருப்ப கோரிக்கை, இன்னும் பிற நாடுகளிடம் இருந்து இதுவரை வரவில்லை. மத்திய அரசு அதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.’’ எனத் தெரிவித்தார்.
முன்னதாக மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. சு.வெங்கடேசன், ’சித்த மருத்துவத்திற்கான இருக்கைகளை வெளிநாடுகளின் கல்வி நிறுவனங்களில் அமைக்க அரசு முயல்கிறதா? இதற்காக எந்த நாடு ஆர்வம் காட்டுகிறது?’’ எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கான பதிலுடன் மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் அதன் மீதான மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் மக்களவையில் சமர்ப்பித்திருந்தார். அதில், குறிப்பிட்ட தகவல்கள் பின்பவருமாறு:
ஐடிஇசி எனும் மத்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் மூலம் மத்திய ஆயுஷ் துறை சித்த மருத்துவத்தை மலேசியாவில் மேம்படுத்துகிறது. மலேசியாவில் "சுங்காய் பூலோ மருத்துவமனையில்" ஒரு சித்த மருத்துவரை நியமித்து, வர்ம சிகிச்சை அளிக்கிறது.
மத்திய அரசின் ஆயுஷ் துறையின் கீழ் இயங்கும் இலங்கையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்தா பிரிவிற்கு நிதி உதவி அளிக்கிறது. மலேசிய அரசுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பத்தப்படி, சித்த மருந்துகளை அங்கு பதிவு செய்து விற்பனை செய்யவும், மலேசிய மாணவர்களை சித்த மருத்துவம் படிக்கவும் முழு உதவி செய்கிறது.
அதன் மூலம் வருடத்திற்கு 9 மாணவர்கள் கல்வி கற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயுஷ் நிறுவனங்கள், மற்றும் ஆயுஷ் மருந்து செய் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவை சர்வதேச கண்காட்சிகள், மாநாடுகள், பட்டறைகள், கருத்தரங்குகள், சாலை காட்சிகள், வர்த்தகக் கண்காட்சிகள் போன்றவற்றில் பங்கேற்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆயுஷ் துறை முனைப்பெடுத்து வருகிறது.
கூடவே வெளி நாடுகளில் சித்த மருந்துகளை ஆயுஷ் மருத்துவமுறைகளை பதியவும், வெளிநாட்டிலுள்ள மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனங்களான யு.எஸ்.எஃப்.டி.ஏ, ஈ.எம்.இ.ஏ, யுகே-எம்.எச்.ஆர்.ஏ, என்.எச்.பி.டி(கனடா), டிஜிஏ. போன்றவற்றுடன் கலந்து சித்தா தயாரிப்புகள் பதிவு செய்திட முனைப்பு காட்டுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.