

நாட்டிலேயே முதன்முறையாக ஜெய்ப்பூரைச் சேர்ந்த மாணவர் மயங்க் பிரதாப் சிங் நீதித்துறை தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் 21 வயதிலேயே அவர் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மயங்க் பிரதாப் சிங், ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் எல்எல்பி முடித்தார். சட்டத்தில் இளநிலை பட்டம் பெற்ற கையுடன் 2018-ம் ஆண்டு நீதித்துறை பணி தேர்வை எழுதினார். இந்த தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது அவர் அதில் வெற்றி பெற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து விரைவில் அவர் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். இதன் மூலம் நாட்டின் இளம் வயது நீதிபதி என்ற பெருமையை பெறவுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ‘‘சமூகத்தில் நீதிபதிகளுக்கு மிகப்பெரிய மரியாதையும் முக்கியத்துவமும் உள்ளது. இதனால் சிறுவயது முதலேய எனக்கு நீதிபதி ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனவே தான் சட்டப்படிப்பை தேர்வு செய்து படித்தேன்.
படித்து முடித்த கையோடு தற்போது நான் விரும்பி நீதிபதி பதவியும் கிடைத்துள்ளது எனக்கு பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்முறையிலேயே வெற்றி கிடைத்துள்ளது எனக்கு மட்டுமல்ல, எனது பெற்றோர், ஆசிரியர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே. நான் வெற்றி பெற உதவிய அனைவருக்கு நன்றி’’ எனக் கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் நீதித்துறை பணித் தேர்வு எழுத குறைந்த பட்ச வயது 23 ஆக இருந்த நிலையில் அண்மையில் அது 21 ஆக குறைக்கப்பட்டது குறிப்பிடத்துக்கது.