

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற கர்நாடக பா.ஜ.க.தலைவர் கள் மோடியின் அமைச்சரவையில் இடம் பிடிப்பதற்காக தீவிர முயற்சி யில் இறங்கியுள்ளனர். முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, சதானந்த கவுடா, பா.ஜ.க.தேசிய பொதுச் செயலாளர் அனந்த்குமார் உள்ளிட்ட பலர் டெல்லிக்கு படையெடுத்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிக ளில் 17 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றியது. தென்னிந்தியாவில் கர்நாடகாவில் மட்டுமே பா.ஜ.க. அதிக இடங்களை கைப்பற்றி இருப்பதால், அந்த மாநில பா.ஜ.க. தலைவர்களிடையே மத்திய அமைச்சர் பதவிக்கான போட்டி தொடங்கியுள்ளது.
டெல்லிக்கு படையெடுப்பு
பா.ஜ.க.விலிருந்து விலகி, தனிக்கட்சி ஆரம்பித்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீண்டும் கடந்த ஜனவரி மாதம் பா.ஜ.க.வில் இணைந்தார். ஷிமோகா தொகுதி யில் போட்டியிட்ட அவர் 3,63,304 வாக்குகள் வித்தியாசத்தில் மகத் தான வெற்றி பெற்றார். அவருடைய வருகையால்தான் 17 இடங்கள் பிடித்து, பா.ஜ.க. மீண்டும் கர்நாட காவில் காலூன்றியது.
எனவே, மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தனக்கு ரயில்வே துறை அல்லது உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை ஒதுக்க வேண்டும் என எடியூரப்பா, கட்சித் தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் சனிக்கிழமை பெங்களூரில் பேசிய முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா, ‘விவசாயிகளின் மேல் அக்கறை கொண்ட எடியூரப்பாவை மத்திய வேளாண் துறை அமைச்சராக்க வேண்டும்' என பா.ஜ.க. தலைமைக்கு வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல பெங்களூர் வடக்கு தொகுதியில் வெற்றிபெற்ற முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, ‘கர்நாடக முதல்வராக எவ்வித புகாரும் இல்லாமல் 11 மாதங்கள் திறம்பட ஆட்சி செய்திருக்கிறேன்.
எனவே, கட்சி மேலிடம் மத்திய அமைச்சரவையில் எனக்கு தகுந்த துறையை ஒதுக்கும்'' என டெல்லி புறப்படுவதற்கு முன்பு தெரிவித்தார்.
மேலும் பெங்களூர் தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற அனந் தகுமார், தார்வாட் தொகுதியில் களமிறங்கிய பா.ஜ.க.மாநில தலைவர் பிரஹலாத் ஜோஷி, உடுப்பி சிக்மகளூர் தொகுதியில் வெற்றி பெற்ற எடியூரப்பாவின் ஆதரவாளரான ஷோபா கரந்த லாஜே ஆகியோரும் மத்திய அமைச்சரவையில் இடம் பிடிப்பதற்காக டெல்லிக்கு சென்றுள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ். தலைவரை சந்தித்த எடியூரப்பா
டெல்லிக்கு சென்றுள்ள எடியூரப்பா தனது ஆதரவாளர் ஷோபா, மோகன் பாகவத்தை உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் களை சந்தித்து பேசினார்.
பா.ஜ.க. மேலிட தலைவர்கள் மட்டுமில்லாமல், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் தனக்கு ஆதரவாக இருந்தால் மத்திய அமைச்சரவையில் முக்கியமான துறையை கைப்பற்றி விடலாம் என கர்நாடக பா.ஜ.க.தலைவர்கள் அனைவரும் வரிசையாக டெல்லியில் தங்கியிருந்து சந்திப்பு களை நிகழ்த்த திட்டமிட்டுள்ளனர். எனவே கர்நாடகாவிற்கு 4 முதல் 6 மத்திய அமைச்சர் பதவிகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக பா.ஜ.க. வட்டாரத்தில் கூறப்படு கிறது.