இந்திய அரசியலின் சாணக்கியரை ஏமாற்றிவிட்டார் சரத் பவார்: பாஜகவை வம்புக்கு இழுத்த என்சிபி

என்சிபி தலைவர் சரத் பவார், பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா : கோப்புப்படம்
என்சிபி தலைவர் சரத் பவார், பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா : கோப்புப்படம்
Updated on
2 min read

இந்திய அரசியலின் சாணக்கியர் என்று கூறுபவரை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஏமாற்றித் தோற்கடித்துவிட்டார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி மறைமுகமாக பாஜகவை வம்புக்கு இழுத்துள்ளது.

பாஜகவின் தேசியத் தலைவராக அமித் ஷா வந்தபின், ஏராளமான மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்க அவரின் சாதுரியமான நடவடிக்கையும், அரசியல் காய் நகர்த்தல்களும் உதவியுள்ளன.

இன்று பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருப்பதற்கு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் திட்டமிட்ட அரசியல் செயல்பாடுகளும், வித்தியாசமான தேர்தல் பணிகளுமே காரணம் என்று அந்தக் கட்சியினரால் கூறப்படுகிறது. இதனால், இந்திய அரசியலின் சாணக்கியர் என்று அமித் ஷா அழைக்கப்படுகிறார்.

ஆனால், மகாராஷ்டிராவில் பாஜக நினைத்த திட்டங்கள் ஏதும் நிறைவேறவில்லை. மகாராஷ்டிராவில் தேர்தல் முடிந்த பின், முதல்வர் பதவிக்காக பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இதனால் பாஜக ஆட்சியமைக்க சிவசேனா ஆதரவு அளிக்காமல் ஒதுங்கிக்கொண்டது.

35 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டணி அமைத்து அரசியல் களத்தில் நெருக்கமாக இருந்த சிவசேனா, பாஜகவை விட்டு மத்தியிலும், மாநிலத்திலும் விலகியது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

பாஜகவும் ஆட்சி அமைக்க பல்வேறு முயற்சிகள் செய்தும் பெரும்பான்மைக்குத் தேவையான 144 எம்எல்ஏக்களைத் திரட்ட முடியவில்லை. இதனால், ஆட்சி அமைக்கும் பந்தயத்திலிருந்து ஒதுங்கியது.

ஆனால், சிவசேனா கட்சி, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் பலகட்டப் பேச்சுகள் நடத்தி மூன்று கட்சிகளும் சேர்ந்து மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் முடிவில் இறங்கியுள்ளன. இதற்கான இறுதிக்கட்ட அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக இல்லாத ஆட்சி வருவதற்கான சூழல்கள் எழுந்துள்ளன.

இருப்பினும், பாஜக தலைவர்களோ தங்களால் ஆட்சி அமைக்க முடியும் என்ற நம்பிக்கையில்தான் இன்னும் பேசி வருகின்றனர். ஆனால், எந்த அளவுக்கு அது சாத்தியம் என்பது தெரியவில்லை.

இந்த சூழலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை வம்புக்கு இழுக்கும் வகையில் கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.

அதில், " இந்திய அரசியலில் சாணக்கியர் என்று சொல்லக்கூடியவரிடம் பேசி சரத் பவார் ஏமாற்றிவிட்டார். டெல்லி அரியணையால் மகாராஷ்டிராவை அடிபணிய வைக்க முடியவில்லை. மகாராஷ்டிராவுக்கு வெற்றி" என்று யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in