

ஹரியாணா கலவர வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹிம் சிங்கின் மகள் ஹனிபிரீத் உள்ளிட்ட 40 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் அமைந்துள்ள தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவராக இருப்பவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். கடந்த 1999-ஆம் ஆண்டு தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த 2 பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கில் 20ஆண்டு சிறை தண்டனை பெற்ற குர்மீத் சிறையில் உள்ளார்.
இந்த வழக்கில் 2017-ம் ஆண்டில் குர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டபோது பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் அவரது ஆதரவாளர்கள் கலவரத்தை ஏற்படுத்தினர். இதற்கு குர்மீத்தின் மகள் ஹனிபிரீத் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் ஹனிபிரீத் இன்சான் உள்ளிட்ட 40 பேர் மீது பஞ்ச்குலா முதன்மை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.
கலவரத்தை ஏற்படுத்தியது, சட்டவிரோதமாக கும்பலைக் கூட்டி விரும்பத்தகாத சம்பவங்களை நிகழ்த்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை ஹனிபிரீத்தின் வழக்கறிஞர் தெரிவித்தார். குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டபோது ஹனிபிரீத் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
– பிடிஐ