

என். மகேஷ்குமார்
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல விரும்பும் வேற்று மதத்தவர்கள், அங்குள்ள தேவஸ்தான பதிவு புத்தகத்தில் “தனக்கு ஏழுமலையான் மீது நம்பிக்கை உள்ளது” என கையெழுத்திட வேண்டும். ஆனால், ஆந்திர முதல்வர் ஜெகன் இரு முறை வந்த போதும், அந்தப் பதிவேட்டில் கையெழுத்து போட வில்லை. வேற்று மதத்தை சேர்ந்த முதல்வர் சமீபத்தில் ஜெருசலேம் சென்று அங்கு குடும்பத்துடன் பிரார்த்தனை செய்து விட்டு வந்தார்.
அப்படி இருக்கும்போது திருமலை பதிவேட்டில் ஏன் அவர் ஏழுமலையான் மீது நம்பிக்கை உள்ளதாக கையெழுத்து போட வில்லை என நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சியினர் கேள்வி எழுப்பினர். இதனை அறிந்த அமைச்சர் கோடாலி நானி, “திருப்பதி தேவஸ்தானம் ஆந்திராவில்தான் உள்ளது. முதல்வராக உள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு அனுமதி தேவையா?” என்றார்.
இதையடுத்து, ஏழுமலையான் கோயில் நிபந்தனைகளை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டுமென பாஜகவின் மாநில செயலாளர் பானுபிரகாஷ் ரெட்டி திருப்பதி போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதுபோல, விஜயவாடாவில் உள்ள சூர்யராவ் பேட்டா போலீஸ் நிலையத்தில் மாநில பிராமணர் சங்க தலைவர் வேமூரி அனந்த சூர்யா தலைமையில் பல்வேறு இந்து அமைப்பினர் புகார் அளித்தனர்.