பாகிஸ்தானில் கைதான 2 இந்தியர்களை ஒப்படைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளோம்: மத்திய வெளியுறவுத் துறை தகவல்

சாத்வி பிரக்யா சிங் தாக்குர்
சாத்வி பிரக்யா சிங் தாக்குர்
Updated on
1 min read

பாகிஸ்தான் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள 2 இந்தியர்களை ஒப்படைக்குமாறு அந்த நாட்டுக்கு இந்தியா கோரிக்கை வைத்துள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் (30). பொறியியல் பட்டதாரியான இவர், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது, தன்னுடன் பணியாற்றி வந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணை அவர் காதலித்துள்ளார். ஆனால், பிரசாந்தின் காதலை அந்தப் பெண் ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பெங்களூருவிலிருந்து மீண்டும் ஹைதராபாத் திரும்பிய பிரசாந்த், அங்கேயே பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி பணிக்கு சென்ற பிரசாந்த், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது பெற்றோர் மாதப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனாலும் பிரசாந்த் பற்றி தகவல் கிடைக்கவில்லை.

இந்நிலையில், உளவு பார்த்ததாகக் கூறி பிரசாந்தை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண போலீஸார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு தொலைக்காட்சி சேனல்களில் 2 தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இதை அறிந்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக உள்ளூர் போலீஸாருக்கு அவர்கள் உடனடியாக தகவல் அளித்தனர்.

இதுகுறித்து அவரது தந்தை பாபு ராவ் கூறும்போது, “என் மகன் தனது காதலியை தேடிச் சென்றபோது பாகிஸ்தான் போலீஸாரிடம் சிக்கி இருக்கலாம். அவனுக்கு வேறு எந்த தொடர்பும் இல்லை. அவனது பாஸ்போர்ட் காணாமல் போய்விட்டது. அப்படி இருக்கும்போது, அவன் எவ்வாறு பாகிஸ்தான் சென்றிருக்க முடியும்” என்றார். இதுபோல மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தரி லால் என்பவரையும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண போலீஸார் கைது செய்திருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று கூறும்போது, “இந்தியர்கள் இருவர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கவனக்குறைவாக எல்லை தாண்டி சென்றிருக்கலாம். இது தொடர்பாக அந்நாட்டு அரசுடன் பேசி வருகிறோம். அங்கு கைதாகி உள்ள 2 பேரையும் தூதரக ரீதியாக சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம். இருவரும் துன்புறுத்தப்படாமல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என நம்புகிறோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in