Last Updated : 22 Nov, 2019 10:42 AM

 

Published : 22 Nov 2019 10:42 AM
Last Updated : 22 Nov 2019 10:42 AM

மகாராஷ்டிராவில் சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையுமா? இன்று இறுதிக்கட்டப் பேச்சு

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் முடிந்து ஒரு மாதமாகியும் இன்னும் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்கவில்லை. சிவசேனா தலைமையில் என்சிபி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் பேச்சில் இன்று இறுதி முடிவு எட்டப்படும் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் சேர்ந்துள்ள இந்தக் கூட்டணிக்கு மகா விகாஸ் அகாதி (பெரும் வளர்ச்சிக் கூட்டணி) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இன்று மும்பையில் நண்பகல் 12 மணிக்கு மேல் மூன்று கட்சிகளும் தனித்தனியாக தங்கள் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்துகின்றன. அதன்பின், மாலை 4 மணிக்கு மேல் மூன்று கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் கூட்டணி தொடர்பாக ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.

இதற்காக சிவசேனா கட்சி தங்களின் எம்எல்ஏக்கள் அனைவரையும் உரிய அடையாள அட்டையுடனும், 5 நாட்களுக்கு உரிய உடையுடனும் வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த மூன்று கட்சிகளைத் தவிர்த்து, சமாஜ்வாதி கட்சி, ஸ்வபிமானி சேத்கரி சங்கதனா, பிடபிள்யுபி கட்சி ஆகிய கட்சிகளும் கூட்டணியில் இணைய உள்ளன.

மகாராஷ்டிராவில் தேர்தல் நடந்து முடிந்த பின் முதல்வர் பதவியைப் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட சிக்கலால், சிவசேனா, பாஜக கூட்டணி முறிந்தது. இதைத் தொடர்ந்து எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்காக குறைந்த செயல் திட்டத்தைத் தீட்டி ஆட்சி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்காக மூன்று கட்சிகளுக்கு இடையே கடந்த 15 நாட்களாக பலகட்டப் பேச்சுகள் நடந்து முடிந்துள்ளன.

இந்த சூழலில் மூன்று கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்ட நிலையில் இன்று மும்பையில் கூடி இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. இதற்காக மூன்று கட்சிகளின் தலைவர்களும் மும்பையில் முகாமிட்டுள்ளார்கள்.

மும்பையில் நள்ளிரவு சரத் பவாரைச் சந்தித்து திரும்பிய உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே

முன்னதாக, நேற்று இரவு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அவரின் மகன் ஆதித்யா தாக்கரே இருவரும் என்சிபி தலைவர் சரத் பவாரை அவரின் இல்லத்தில் சென்று சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பு நள்ளிரவு வரை நடந்துள்ளது. அப்போது கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தான் விளக்கியுள்ளதாக சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவிடம் தெரிவித்தார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக என்சிபி கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் நிருபர்களிடம் கூறுகையில், " இன்று மூன்று கட்சிகளும் தங்கள் எம்எல்ஏக்களுடன் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபடுகின்றன. அதன்பின் மாலை 4 மணிக்கு மேல் மூன்று கட்சித் தலைவர்களும் ஆலோசனையில் ஈடுபடுகிறார்கள். அதன்பின் மாலை ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆட்சி அமைக்கும் முடிவைத் தெரிவிப்போம். ஆளுநர் தற்போது மும்பையில் இல்லை. அவர் டெல்லி சென்றுள்ளார் என்பதால், ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை ஆளுநரின் செயலாளரிடம் அளிப்போம்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x