பள்ளிக்குச் சொந்தமான நிலத்தை நித்யானந்தா ஆசிரமத்துக்கு வழங்கியது ஏன்? - சிபிஎஸ்இ புகார்

பள்ளிக்குச் சொந்தமான நிலத்தை நித்யானந்தா ஆசிரமத்துக்கு வழங்கியது ஏன்? - சிபிஎஸ்இ புகார்
Updated on
1 min read

பள்ளிக்குச் சொந்தமான நிலத்தை அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்திற்கு அனுமதியில்லாமல் குத்தைகைக்கு வழங்கியது குறித்து குஜராத் கல்வித்துறைக்கு சிபிஎஸ்இ விளக்கம் கேட்டுள்ளது.

இது தொடர்பாக சிபிஎஸ்இ தனது எழுத்துப்பூர்வ நோட்டீஸில், டிபிஎஸ் மணிநகர நிலத்தை அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு தங்கள் அனுமதியின்றி குத்தகைக்கு வழங்கியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுள்ளது.

பள்ளியின் முதல்வர் ஹிதேஷ் பூரியிடம் இது தொடர்பாக ஊடகத் தரப்பினர் கேள்வி எழுப்பிய போது, குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக கூறினார். ஆனால் அனுமதி பெறப்பட்டதா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.

முன்னதாக, குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஜனார்த்தன் சர்மா என்பவரும், அவரது மனைவியும் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்துக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் எங்கள் மகள்கள் 2013-ம் ஆண்டு முதல் படித்து வந்தனர். ஆனால் சில ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் அகமதாபாத்தில் உள்ள நித்தியானந்தா கல்வி நிறுவனத்தின் கிளைக்கு சொந்தமான கல்வி நிறுவனம் ஒன்றுக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் அங்கு படித்த வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு எங்கள் மகள்களை சந்திக்கச் சென்றோம். ஆனால் எங்கள் மகள்களை சந்திக்க எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதன் பிறகு காவல்துறையிடம் புகார் அளித்தோம். அவர்கள் வந்து விசாரித்து விட்டுச் சென்றனர். ஆனால் எங்கள் மகள்களை மீட்டுத்தரவில்லை.

அந்த பள்ளியின் நிர்வாகிகள் எங்கள் மகள்கள் வீட்டுக்கு செல்ல விரும்பவில்லை எனக் கூறுகின்றனர். எங்கள் மகள்கள் கடத்தப்பட்டு, சட்டவிரோதமாக அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். எங்கள் மகள்களை மீட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். குஜராத் போலீஸாருக்கு இதுதொடர்பாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in