

டெல்லி மற்றும் உ.பி.யின் மதுராவில் குரங்குகளால் ஏற்படும் தொல்லைகளை பாஜக எம்.பியான நடிகை ஹேமமாலினி வியாழனன்று மக்களவையில் எழுப்பினார். மதுரா தொகுதி எம்.பியான அவர் இதுபோன்ற பிரச்சனை தெய்வீகஸ்தலங்களில் நிலவுவதாகவும் கவலை தெரிவித்தார்.
இது குறித்து நடிகை ஹேமாமாலினி மக்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் கூறும்போது, ‘எனது தொகுதியான மதுராவிற்கு வரும் பக்தர்களின் பொருட்களை பறிப்பதில் குரங்குகள் ஈடுபடுகின்றன. இதற்காக, அரசு குரங்குகளுக்கான வனப்பகுதியை உருவாக்க வேண்டும்.’ எனத் தெரிவித்தார்.
குரங்குகள் பறிக்கும் உணவு குறித்து ஹேமமாலினி மேலும் பேசுகையில், ‘மாறிய உணவுப்பழக்கத்தால் குரங்குகளுக்கு ஒருவித நோய் பரவுவகிறது. பழங்களுக்கு பதிலாக குரங்குகள் மனிதர்களிடம் இருந்து சமோசா மற்றும் ப்ரூட்டி ஜூஸ் போன்றவற்றை பறித்து உண்கிறது.’ எனக் குறிப்பிட்டார்.
இதை தொடர்ந்து மக்களவையின் மற்ற பல உறுப்பினர்களும் டெல்லியிலும் குரங்குகள் தொல்லை அளிப்பதாகப் புகார் தெரிவித்தனர். உறுப்பினர்களின் சிரிப்பலைகளுக்கு இடையே இந்த பிரச்சனை மக்களவையின் முன் வைக்கப்பட்டது.
இது குறித்து லோக் ஜன சக்தி கட்சியின் எம்.பியான சிராக் பாஸ்வான் பேசும்போது, ‘குரங்குகள் அளிக்கும் தீவிரத் தொல்லகளால் டெல்லியின் பூங்காக்களில் குழந்தைகள் விளையாட முடிவதில்லை. வனங்கள் அழிக்கப்பட்டு வருவதால் அவைகள் நாம் வாழும் வீடுகளில் நுழைகின்றன.’ எனத் தெரிவித்தார்.
அப்போது எழுந்த திரிணமுல் காங்கிரஸ் எம்.பியான சுதீப் பந்தோபாத்யா, டெல்லியில் தம் மூக்குக்கண்ணாடி பிடுங்கியதை நினைவு கூர்ந்தார். இதற்கு பதிலாக அவர் குரங்கிற்கு பழச்சாறு கொடுத்த பின் கண்ணாடியை திருப்பி அளித்ததாகவும் சுதீப் குறிப்பிட்டார்.