Last Updated : 21 Nov, 2019 06:22 PM

 

Published : 21 Nov 2019 06:22 PM
Last Updated : 21 Nov 2019 06:22 PM

சந்திரயான்-2 தோல்வி என விவரிப்பது நியாயமில்லை: மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்

சந்திரயான்-2 : கோப்புப்படம்

புதுடெல்லி

தொழில்நுட்பரீதியாக சந்திரயான்-2 வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளதால், அது தோல்வி அடைந்துவிட்டது என்று விவரிப்பது நியாயமில்லாதது என்று மத்திய அறிவியல் விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்துள்ளார்.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காகச் சந்திரயான்-2 கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 48 நாட்கள் பயணத்துக்குப் பின் கடந்த 7-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் இறங்கத் திட்டமிடப்பட்டு இருந்தது.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விண்வெளி மையத்தில் விக்ரம் லேண்டர் சாஃப்ட் லேண்டிங் ஆவதைக் காண ஏராளமான முன்னாள் விஞ்ஞானிகள், இஸ்ரா விஞ்ஞானிகள் காத்திருந்தனர். நள்ளிரவில் நடந்த நிகழ்ச்சியைக் காணப் பிரதமர் மோடியும் இஸ்ரோவுக்கு வந்திருந்தார்.

நிலவின் தென்துருவத்தில் உள்ள மான்சினஸ் சி மற்றும் சிம்பிலியஸ் எஸ் எனும் இரு பள்ளங்களுக்கு இடையே விக்ரம் லேண்டர் கருவியைத் தரையிறக்க விஞ்ஞானிகள் கடந்த 7-ம் தேதி முடிவு செய்திருந்தனர்.

ஆனால், திடீரென விக்ரம் லேண்டர் கருவியின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் விக்ரம் லேண்டர் கருவியைத் தொடர்புகொள்ள இஸ்ரோ சார்பில் பலமுறை முயற்சி மேற்கொள்ளப்பட்டும் முடியவில்லை. சந்திரயான்-2 திட்டம் தோல்வி அல்ல 98 சதவீதம் வெற்றி என்று இஸ்ரோ தெரிவித்தது.

இந்நிலையில் மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மனாஸ் ரஞ்சன் புனியா, சந்திரயான்-2 திட்டம் தோல்வி அடைந்தது குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு மத்திய அறிவியல் விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த விளக்கத்தில் கூறியதாவது:
சந்திரயான்-2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில் அதை தோல்வி என விவரிப்பது நியாயமில்லாதது. நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் சாப்ஃட் லேண்டிங் செய்யும் போது ஏற்பட்டது பின்னடைவுதான்.ஆனால், எதிர்காலத்தில் விண்கலத்தை வலிமையாகவும், செலவைக் குறைக்கும் வகையில் செயல்படுத்துவோம்.

விண்வெளித்துறையில் மிகவும் முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, தங்களுடைய விண்வெளிப்பயணத்தை தொடங்கியபோது, 8 முறை சாஃப்ட் லேண்டிங் செய்து அதில் தோல்வி அடைந்தபின்தான் வெற்றி பெற்றது.

சந்திரயான்-2 திட்டம் அனைத்து இந்தியர்களாலும் தீவிரமாக உற்றுநோக்கப்பட்டது. ஆனால், அந்த திட்டத்தைத் தோல்வி என விவரிப்பது நியாயமற்றது. பூமியின் சுற்று வட்டப்பாதைக்குள் சந்திரயான்-2 வெற்றிகரமாக நுழைந்தது, புவி நீள்வட்டப் பாதைக்குள்ளும் வெற்றிகரமாக நுழைந்தது.

ஆதலால், அடுத்தடுத்த முயற்சிகளில் நம்முடைய இஸ்ரோ சிறப்பாகச்செயல்பட்டுக் குறைந்த செலவில் அடுத்த முயற்சியைத் தொடங்கும். சந்திரயான் விண்கலத்திலிருந்த ஆர்பிட்டர், அது செயல் இழக்கும் வரை கடைசி 30 நிமிடங்கள்வரை சிறப்பாகவே செயல்பட்டது. ஆதலால் அதைத் தோல்வி என வர்ணிக்க முடியாது.

இந்த நேரத்தில் பிரதமர் கூறிய வார்த்தைகளைத்தான் நினைவு கூற வேண்டும். விக்ரம் லேண்டர் தரையிறங்குவதில் பின்னடைவு இருந்திருக்கலாம். ஆனால், இப்போதுவரை சந்திரயான் வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டது என்பதை நாம் கண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டும்.

நிலவில் உள்ள சூழல், அங்குள்ள அமைப்பு, ரேடார் அடிப்படையிலான தகவல்கள் உள்ளிட்ட அறிவியல்ரீதியான நோக்கங்கள் இதில் நிறைவேறியிருக்கின்றன.

லேண்டர் தரையிறங்குவதில் சாஃப்ட் லேண்டிங் என்பது சில நேரங்களில் வெற்றிகரமானதாக இருக்காது. எந்த நாடும் இதுவரை குறைந்தபட்சம் இருமுறையேனும் சாஃப்ட் லேண்டிங்கில் தோல்வி அடைந்தபின்தான் அதை வெற்றிகரமாகச் செய்துள்ளன.

அமெரிக்கா விண்வெளிப்பயணத்தை நமக்கு முன்கூட்டியே தொடங்கிவிட்டது. அதாவது நாம் நர்சரி பாடத்தில் சந்திரனைப் பற்றிப் படித்த காலத்தில் அவர்கள் நிலவுக்கு சென்றுவி்ட்டார்கள். அமெரிக்காகூட 8-வது முறையில்தான் சாஃப்ட் லேண்டிங்கை வெற்றிகரமாக முடித்தார்கள். அதேசமயம், மற்ற நாடுகளின் அனுபவத்திலிருந்து நாமும் பாடம் கற்க வேண்டும்
இவ்வாறு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x