கீழடி கண்டுபிடிப்பு: சங்ககாலம் குறித்த என்சிஆர்டி பாடத் திட்டத்தில் மாற்றம் தேவை: மக்களவையில் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

கீழடி கண்டுபிடிப்பு: சங்ககாலம் குறித்த என்சிஆர்டி பாடத் திட்டத்தில் மாற்றம் தேவை: மக்களவையில் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்
Updated on
1 min read

கீழடி தொல்லியல் ஆய்வு குறித்து மதுரை தொகுதி எம்.பி சு.வெங்கடேசன் இன்று மக்களவையில் பேசினார். இதன் கண்டுபிடிப்பிற்கு ஏற்றவாறு 6, 12 வகுப்புகளின் என்சிஆர்டி வரலாற்றுப் பாட நூல்களில் சங்ககாலத்தை 300 ஆண்டுகள் முற்பட்டதாக மாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினரான சு.வெங்கடேசன் மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் பேசியதாவது:

தமிழக அரசு இந்த ஆண்டு கீழடியில் நடத்திய தொல்லியல் அகழாய்வில் கீழடியினுடைய காலம் கிமு ஆறாம் நூற்றாண்டு என்று மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை, நேற்றைய தினம் மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சரும் உறுதிப்படுத்தியிருக்கிறார். இந்தப் பின்னணியில் நான் இந்த அவையின் முன ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைக்கிறேன்

ஆறு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளின் என்சிஆர்டி பாடபுத்தகங்களில் தமிழ் நாகரிகத்திற்கான சங்ககாலத்தினுடைய காலம் கிமு மூன்றாம் நூற்றாண்டு என்று இருக்கிறது. இதை திருத்தி அதன் காலம் கி.மு ஆறாம் நூற்றாண்டு என வரும் கல்வி ஆண்டில் மாற்ற வேண்டும்.

கங்கையை போல் தமிழக நதிக்கரையிலும் நகரங்கள்

இரண்டாவதாக, என்சிஆர்டியின் பல பாடங்களில் கி.மு ஆறாம் நூற்றாண்டிலேயே கங்கை கரையில் பெரிய நகரங்கள் உருவானதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில், கங்கைக்கரையில் பெரு நகரங்கள் உருவான அதே காலத்தில் வைகைக்கரையிலும் தமிழகத்தின் நதிக்கரையிலும் நகரங்கள் உருவாக்கி விட்டன எனக் குறிப்பிடவேண்டும்.

எழுத்தறிவு பெற்ற நகரங்கள்

மூன்றாவதாக, அவ்வாறு தமிழகத்தின் நதிக்கரையில் கிமு ஆறாம் நூற்றாண்டில் உருவான நகரங்கள் எழுத்தறிவு பெற்றவையாக இருந்தது என்பதை மிக முக்கியமாக குறிப்பிட வேண்டும். இந்த மூன்று கோரிக்கைகளை நான் இந்த அவையின் கூறுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in