Last Updated : 21 Nov, 2019 03:37 PM

 

Published : 21 Nov 2019 03:37 PM
Last Updated : 21 Nov 2019 03:37 PM

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்., என்சிபி கூட்டணி ஆட்சி? காரியக் கமிட்டி ஒப்புதல்: நாளை இறுதி முடிவு

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து அமைக்க உள்ள கூட்டணி ஆட்சிக்கு காங்கிரஸ் காரியக் கமிட்டி கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், கூட்டணியை உறுதி செய்வது குறித்து நாளை இறுதிக்கட்ட முடிவு எடுக்கப்படும. இம்மாத இறுதியில் ஆட்சி அமைக்கும் பணி தொடங்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிராவில் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவும் சிவசேனாவும் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருப்பதால், இரு கட்சிக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இரு கட்சிகளாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. பெரும்பான்மை இல்லாததால் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராததையடுத்து, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் சிவசேனா கட்சி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கியுள்ளன. ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளும், என்சிபி கட்சியின் பிரதிநிதிகளும் நேற்று டெல்லியில் ஆலோசித்தனர்.

இந்நிலையில், இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், மகாராஷ்டிராவில் என்சிபி, சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க கொள்கை ரீதியாக ஒப்புதல் அளிக்கப்பட்டது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து காங்கிஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நிருபர்களிடம் கூறுகையில், "தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசித்த விவரங்கள் காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தெரிவிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. பல்வேறு அம்சங்கள், சிவசேனாவுடன் இணைந்து செயலாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. டிசம்பர் முதல் வாரத்துக்குள் மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமையும்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், " மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பது குறித்த இறுதி முடிவு நாளை எடுக்கப்பட உள்ளது. சிவசேனா, என்சிபி கட்சிகளுடன் சேர்ந்து மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைக்கக் காரியக் கமிட்டி கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று பிற்பகலுக்குப் பின் காங்கிரஸ், என்சிபி தலைவர்கள் மீண்டும் சந்தித்துப் பேச உள்ளனர். அதன்பின் நாளை சிவசேனா கட்சியுடன் மும்பையில் இறுதிக்கட்டப் பேச்சு நடக்கும். புதிய ஆட்சி அமைப்பது தொடர்பான இறுதி முடிவு நாளை முடிவு செய்யப்படும். சோனியா காந்தி, உத்தவ் தாக்கரே சந்திப்பு ஏதும் முடிவாகவில்லை" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x