

நக்சல்களின் பிடியில் இருந்த ஜார்க்கண்ட்டை மீட்டு தனி மாநிலமாக உருவாக்கிய பெருமை பாஜகவையே சாரும் என அக்கட்சியின் தலைவர் அமித் ஷா பேசினார்.
81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ம் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 23-ம் தேதி வெளியாகிறது.
இந்த தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஆளும் பாஜக கட்டணியில் ஜார்கண்ட் மாணவர் அமைப்பு, ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன.
ஜார்க்கண்ட் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஐக்கிய ஜனதாதளம், மற்றொரு கூட்டணி கட்சியான ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பு, லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. அந்த கட்சிகளை சமரசம் செய்யும் பாஜக முயற்சி பெற்ற பெறவில்லை.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்கண்ட் மாணவர் யூனியன் அமைப்புடன் சேர்ந்து ஆட்சியமைத்த நிலையில் இந்த தேர்தலில் அந்த கட்சி தனித்து போட்டியிடுவது பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் ஜார்க்கண்ட் மாநில தேர்தலையொட்டி பாஜக தலைவர் அமித் ஷா இன்று முதல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். மணிகா நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அமித் ஷா பேசியதாவது:
‘‘மிகவும் பின்தங்கிய பகுதியான ஜார்க்கண்டை தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் நீண்ட காலமாக போராடி வந்தனர். இதற்காக பலர் உயிர் இழந்துள்ளனர். பலர் தியாகம் செய்துள்ளனர். பிர்ஸா முண்டா காலத்தில் இருந்து நடந்த போராட்டத்திற்கு வெற்றி தேடி தந்தது பாஜக தான்.
காங்கிரஸ் அதனை செய்ய முன்வரவில்லை. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் தான் ஜார்க்கண்ட் மாநிலம் உருவானது. பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ரகுபர் தாஸ் ஆட்சிக்காலத்தில் ஜார்க்கண்ட் மாநிலம் மிகுந்த வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது.’’ எனக் கூறினார்.