

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ.1.05 லட்சம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது. அதன் ஒருபகுதியாக 5 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
அதன்படி, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பிபிசில்), கன்டெய்னர் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிஓஎன்சிஓஆர்), ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எஸ்சிஐ), டிஹெச்டிசி, என்இஇபிசிஓ, என்டிபிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்புதலின்படி இந்த நிறுவனங்களின் மேலாண்மை கட்டுப்பாட்டில் பல்வேறு மாற்றங்கள் வர உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "பிபிசிஎல், கான்கார், எஸ்சிஐ ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் அரசிடம் இருக்கும் பங்குகள் விற்கப்பட உள்ளன. இதில் டிஹெச்டிசி, நீப்கோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் முழுமையாக விற்கப்பட உள்ளன. பிபிசிஎல் நிறுவனத்தின் 53.29 சதவீதப் பங்குகள் முழுமையாக விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த பங்குகள் விற்பனை இரு பிரிவுகளாக நடக்கும்" எனத் தெரிவித்தார்.
ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அரசிடம் இருக்கும் 63.75 சதவீதப் பங்குகள் முழுவதையும் மத்திய அரசு விற்பனை செய்ய உள்ளது. மேலும் கன்டெய்னர் கார்ப்பரேஷன் இந்தியாவின் 30.8 சதவீதப் பங்குகளையும், நிர்வாகக் கட்டுப்பாட்டையும் வாங்கும் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
டிஹெச்டிசிஐஎல் நிறுவனத்தின் முழுமையான 74.23 சதவீதப் பங்குகள், வடகிழக்கு மின்சக்தி கழகமான நீப்கோ ஆகிய பங்குகள் என்டிபிசி நிறுவனத்திடம் விற்கப்பட உள்ளன.
பிபிசில் நிறுவனத்தின் 53.29 சதவீதப் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.60 ஆயிரம் கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் நடப்பு நிதியாண்டில் பங்கு விலக்கல் மூலம் ரூ.1.05 லட்சம் கோடி திரட்ட முடிவு செய்துள்ள மத்திய அரசின் இலக்கில் பாதி இலக்கு நிறைவேற்றப்பட்டு விடும். இதுவரை ரூ.17,364 கோடி மட்டுமே பங்கு விலக்கல் மூலம் வந்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், என்டிபிசி நிறுவனத்திடம் நீப்கோ, டிஹெச்டிசி நிறுவனங்களின் பங்குகளை முழுமையாக விற்பனை செய்வதன் மூலம் ரூ.10 ஆயிரம் கோடி கிடைக்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல, எஸ்சிஐ நிறுவனம், கன்டெய்னர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.12,500 கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.