

மகாராஷ்டிராவில் அடுத்த 10 நாட்களில் ஆட்சி அமைப்பது தொடர்பான அனைத்துப் பணிகளும் முடிந்துவிடும். இந்தியாவின் அடித்தளம் மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்டது என சிவேசனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் தேர்தல் முடிந்து ஒருமாதம் ஆக இருக்கும் நிலையில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை. இதனால், அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி அமைப்பது தொடர்பாக இறுதிக்கட்டப் பேச்சில் ஈடுபட்டு வருகின்றன. இதுகுறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், சிவசேனாவின் தீவிர இந்துத்துவா போக்கைக் கைவிடக் காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறதா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ராவத் கூறுகையில், "இந்த தேசத்தின் அடித்தளம் மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்டது. பசியோடு இருக்கும் விவசாயிகள், வேலையில்லாதவர்களிடம் சாதி அல்லது மதத்தைக் கேட்கமாட்டீர்கள். இந்த நாட்டில் உள்ள அனைவரும் மதச்சார்பற்றவர்கள்தான்.
மகாராஷ்டிராவில் ஆண்ட சத்ரபதி சிவாஜி மன்னர், அனைத்து மக்களையும் மதம், சாதி வேறுபாடு இன்றிதான் அரவணைத்துச் சென்றார். மகாராஷ்டிராவில் முதல்வர் பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்வது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. அதற்கான பேச்சு நடந்து வருகிறது.
காங்கிரஸ், என்சிபி தலைவர்கள் என்னிடம், ஆலோசனை சுமுகமாகச் செல்கிறது, குறைந்தபட்ச செயல் திட்டம் திட்டமிட்டபடி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்கள். இன்று டெல்லியில் சரத் பவாரைச் சந்திக்க இருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி, சரத் பவார் சந்திப்பு குறித்துக் கேட்டபோது சஞ்சய் ராவத் கூறுகையில், "பிரதமர் மோடியை சரத் பவார் சந்தித்ததில் என்ன தவறு இருக்கிறது? விவசாயிகள் பிரச்சினையைத் தீர்க்க மூத்த தலைவர் பவார், பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளார். இதில் தவறு ஏதும் இல்லை" எனத் தெரிவித்தார்.