Last Updated : 21 Nov, 2019 11:00 AM

 

Published : 21 Nov 2019 11:00 AM
Last Updated : 21 Nov 2019 11:00 AM

மகாராஷ்டிராவில் நவ.30-ம் தேதிக்குள் சிவசேனா தலைமையில் ஆட்சி: காங்கிரஸுக்கு துணை முதல்வர், சபாநாயகர் பதவி?

என்சிபி தலைவர் நவாப் மாலிக், காங்கிரஸ் தலைவர் பிரித்விராஜ் சவாண் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காட்சி : படம் ஏஎன்ஐ

புதுடெல்லி

மகாராஷ்டிராவில் எந்தக் கட்சி ஆட்சி அமைப்பது என்பதில், கடந்த ஒரு மாதமாக இழுபறி நீடித்து வந்த நிலையில், வரும் 30-ம் தேதிக்குள் சிவசேனா தலைமையில் ஆட்சி அமையும் என்று என்சிபி, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிராவில் முதல்வர் பதவியை சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பகிர்ந்து கொள்வது என்றும், முதல் பாதியில் சிவசேனா சார்பில் முதல்வர் பதவி வகிக்கவும், 2-வது பாதியில் என்சிபி தரப்பில் முதல்வர் பதவி வகிக்கவும் பேசப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிராவில் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவும் சிவசேனாவும் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருப்பதால், இரு கட்சிக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால் இரு கட்சிகளாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. பெரும்பான்மை இல்லாததால் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராததையடுத்து, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், சிவசேனா கட்சி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கியுள்ளன. ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளும், என்சிபி கட்சியின் பிரதிநிதிகளும் நேற்று டெல்லியில் ஆலோசித்தனர். என்சிபி கட்சியின் சார்பில் நவாப் மாலிக், காங்கிரஸ் கட்சி சார்பில் பிரித்விராஜ் சவாண், அகமது படேல், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நீண்ட ஆலோசனைக்குப் பின் நிருபர்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான பிரித்விராஜ் சவாண் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "வரும் 22-ம் தேதிக்குள் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இறுதி முடிவு எடுத்துவிடுவோம். மகாராஷ்டிராவில் விரைவில் நிலையான ஆட்சி அமையும். 3 கட்சிகளும் ஒன்றாக இணைந்துதான் ஆட்சி அமைக்க இருக்கின்றன. குறைந்தபட்ச செயல் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. நவம்பர் இறுதியில் சிவசேனா தலைமையில் ஆட்சி அமையும்" எனத் தெரிவித்தார்.

என்சிபி செய்தித்தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், "சிவசேனாவுடன் காங்கிரஸ், என்சிபி சேர்வதில் எந்தவிதமான குழப்பமும் இல்லை. 3 கட்சிகளும் சேராமல் ஆட்சி அமைக்க இயலாது. நவம்பர் 30-ம் தேதிக்குள் மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் ஆட்சி அமையும்" எனத் தெரிவித்தார்.

என்சிபி கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "நவம்பர் 30-ம் தேதிக்குள் மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் ஆட்சி் அமையும். ஆட்சியில் சரிபாதியைப் பிரித்துக்கொள்ள சிவசேனாவும் என்சிபியும் சம்மதம் தெரிவித்துள்ளன. முதல் பாதியில் சிவசேனா தரப்பில் ஒருவர் முதல்வராகவும், இரண்டாவது பாதியில் என்சிபி தரப்பில் ஒருவர் முதல்வராகவும் இருப்பார். காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவியும், சபாநாயகர் பதவியும், 11 அமைச்சர்கள் பொறுப்பும் வழங்கப்படப் பேச்சு நடத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இறுதிக்கட்டப் பேச்சு மும்பையில் நாளை சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. ஆட்சி அமைப்பது தொடர்பாக அங்கு முடிவு செய்யப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x