

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தினர் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மீண்டும் எஸ்பிஜி (சிறப்பு பாதுகாப்பு படை) பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாநிலங் களவையில் காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.
சோனியா காந்தி, அவரது மகன் ராகுல், மகள் பிரியங்கா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை மத்திய அரசு இம்மாதம் விலக்கிக் கொண்டது. அதற்கு பதிலாக அவர்களுக்கு சிஆர்பிஎப் சார்பில் ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை மக்களவை யில் காங்கிரஸ் கட்சி நேற்று முன் தினம் எழுப்பி அமளியில் ஈடு பட்டது.
இந்நிலையில் மாநிலங்களவை யில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் இந்த விவகாரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா எழுப்பினார். அப்போது அவர் பேசும்போது, “நான்கு தலைவர் களுக்கான பாதுகாப்பு அச்சுறுத் தல் முழுமையாக மதிப்பிடப்பட வில்லை. இதனால் அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற் பட்டுள்ளது. தலைவர்களை பாது காக்க வேண்டியது அரசின் கடமை. எனவே அரசியலுக்கு அப் பாற்பட்டு காங்கிரஸ் தலைவர் களுக்கு மீண்டும் எஸ்பிஜி பாது காப்பு வழங்க வேண்டும்” என்றார்.
அப்போது பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எழுந்து, “பாதுகாப்பு அச்சுறுத்தலை உள் துறை அமைச்சக சிறப்புக் குழுவே மதிப்பிட்டு வருகிறது. அதன் முடிவில் உடன்பாடு இல்லை என்றால் நீதிமன்றம் செல்லலாம். விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டு விட்டதாலும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மீது காங்கிரஸ் பரிவு காட்டுவதாலும் அதன் தலைவர்களுக்கு அச்சுறுத் தல் விலகிவிட்டது” என்றார்.
இதனிடையே உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறும் போது, “எஸ்பிஜி வாபஸ் விவகாரம் முடிந்துபோன விஷயமாகும். இந்த விவகாரத்தை காங்கிரஸ் தொடர்ந்து எழுப்பினாலும் அந்த முடிவில் இருந்து பின்வாங்கும் திட்டமில்லை” என்று தெரிவித்தன.