Published : 21 Nov 2019 09:56 AM
Last Updated : 21 Nov 2019 09:56 AM

17 ஆண்டாக எம்எஸ்சி எலக்ட்ரானிக் மீடியா பாடப்பிரிவை அங்கீகாரம் பெறாமல் நடத்தும் அண்ணா பல்கலை: டிஆர்பி தேர்வு எழுத முடியாமல் மாணவர்கள் தவிப்பு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரிய (டிஆர்பி) பாடப்பிரிவு பட்டியலில் ஒருங்கிணைந்த எம்எஸ்சி - எலக்ட்ரானிக் மீடியா (எம்எஸ்சி-இஎம்) இடம்பெற வில்லை. இதனால் மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி) சார்பில், 1980-களில் நாட்டின் பல பல்கலைக்கழகங் களில் எலக்ட்ரானிக் மல்டிமீடியா ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. இதன் செயல்பாடுகள் குறைந்த தால், அதன் சார்பில் 2002-ம் ஆண்டு எம்எஸ்சி-இஎம் பாடப் பிரிவு அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் பத்திரிகை உலகில் தொலைக்காட்சி ஊடகங் களுக்கு கிடைத்த பெரும் வர வேற்பே இதற்குக் காரணமானது. இதில், 12-ம் வகுப்பு முடித்தவர் களுக்கென 5 ஆண்டு ஒருங் கிணைந்த எம்எஸ்சி படிப்பும், ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்காக 2 ஆண்டு எம்எஸ்சி படிப்பும் இருந்தது.

இவ்விரு படிப்புகளுக்கும் கட்டணம் மிக அதிகமாக வசூ லிக்கப்பட்டு, அக்கல்விகளுக்கான நிதி சமாளிக்கப்பட்டது. இதில் இணைந்து பட்டம் பெற்ற மாணவர்கள் பலரும் இன்று நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றுகின்றனர். இதைத் தொடர்ந்து அதே பாடப்பிரிவில் முனைவர் பட்டத்துக்கான கல்வியும் தொடங்கப்பட்டது.

இதைப் பயின்ற பலர், பல்வேறு மத்திய, மாநில அரசு பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்களாக பணியாற்றுகின்றனர். எனினும், எம்எஸ்சி-இஎம் பாடப்பிரிவுக்கு என யூஜிசி, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், தமிழக அரசு என எதனிடமும் அண்ணா பல்கலைக்கழகம் இதுவரை அங்கீகாரம் பெற வில்லை.

இந்நிலையில், சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்ட டிஆர்பி தேர்வுக் கான அறிவிப்பில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்எஸ்சி எலக்ட்ரானிக் மீடியா பாடப்பிரிவு இடம்பெற வில்லை. இதில், 2 ஆண்டு எம்எஸ்சி-இஎம் கல்வியை மட்டும் தமிழக அரசு அங்கீகரித்துள்ளது. இதனால், ஒருங்கிணைந்த எம்எஸ்சி-இஎம்-ன் இந்நாள், முன்னாள் மாணவர்கள் மற்றும் அதன் பேராசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக் மல்டி மீடியா ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநரும் ஏபிஜே ஸ்த்யா பல்கலைக்கழகத்தின் தகைசால் பேராசிரியருமான முனைவர். ஆர்.தர் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, “இதழியல் போல் அல்லாமல் தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்ற தொழில்நுட்பமும் அவசியமாகிறது. எனவேதான் இதுதொடர்பான பாடப்பிரிவு பொறியியல் பல்கலைக்கழகத் தில் தொடங்கப்பட்டது.

இன்று செய்தியைப் பொறுத்த வரை பொதுமக்கள் இடையே தொலைக்காட்சி ஊடகங்களே முக்கிய இடம் வகிக்கின்றன. எனவே, தமிழக அரசு இப் பாடப்பிரிவை டிஆர்பி தேர்வில் சேர்ப்பதுடன் அதற்கு அங்கீகாரம் அளிப்பதும் அவசியமாகும்” என்றார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்எஸ்சி-இஎம் பாடப்பிரிவில் தற்போது 200 மாணவர்களும், சுமார் 20 பேராசிரியர்களும் உள்ளனர். இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x