

இழப்பில் இருக்கும் பிஎஸ்என்எஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்தை மறுசீரமைத்து, லாபமானதாக மாற்றிக் காட்டுவோம் என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நம்பிக்கை தெரிவித்தார்.
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், " கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து இழப்பைச் சந்தித்து வருகிறது. அதேபோல மற்றொரு அரசு நிறுவனமான எம்டிஎன்எல் நிறுவனமும் கடந்த 9 ஆண்டுகளாக இழப்பில் செயல்பட்டு வருகிறது. இரு நிறுவனங்களும் கூட்டாக ரூ.40 ஆயிரம் கோடி இழப்பில் இருக்கிறது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தைச் சீரமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தைச் சீரமைத்து, நாங்கள் லாபகரமானதாக மாற்றுவோம். பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள் இணைப்புக்கு கொள்கை ரீதியாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த18 முதல் 24 மாதங்களுக்குள் இரு நிறுவனங்களும் இணைக்கப்படும்.
கடந்த மாதம் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனத்துக்கு ரூ.69 ஆயிரம் கோடி நிதியுதவியை மத்திய அரசு அறிவித்தது. அதில் ஊழியர்களுக்கு விஆர்எஸ் திட்டம் செயல்படுத்துதல், 4ஜி தொழில்நுட்பத்துக்காக ஸ்பெக்ட்ராம் வாங்க ரூ.20,140 கோடி ஒதுக்கீடு, ஜிஎஸ்டி வரிக்காக ரூ.3,674 கோடி ஒதுக்கப்பட்டது.
விஆர்எஸ் திட்டத்துக்கு ரூ.17,160 கோடி, ஓய்வூதியத் தொகையாக ரூ.12,768 கோடி, கடன் மீட்புக்கு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
டிஜிட்டல் பரிமாற்றம் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு ரவிசங்கர் பிரசாத் எழுத்துபூர்வமாக பதில் அளித்தார். அதில், "நடப்பு நிதியாண்டில் நவம்பர் 13-ம் தேதி வரை 2,100 கோடி டிஜிட்டல் பரிமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2018-19 நிதியாண்டில் 3,134 கோடி டிஜிட்டல் பரிமாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன.
கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் பரிமாற்றத்தில் நல்ல முன்னேற்றம் இருந்து வருகிறது. கடந்த 2016-17 ஆம் ஆண்டில் 1,004 கோடி டிஜிட்டல் பரிமாற்றங்கள் இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் நவம்பர் 13-ம் தேதி வரை 2,178 கோடி பரிமாற்றங்கள் நடந்துள்ளன.
ஆண்டுக்கு ஆண்டு 74 சதவீதம் வளர்ந்துள்ளதைக் காட்டுகிறது. 2017-18 ஆம் ஆண்டில் 106 சதவீதம் டிஜிட்டல் பரிமாற்றம் வளர்ந்துள்ளது. 2018-19 ஆம் ஆண்டில் 51 சதவீதம் டிஜிட்டல் பரிமாற்றம் முன்னேற்றம் கண்டுள்ளது" என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.