ஜார்க்கண்ட் தேர்தலில் பலமுனைப் போட்டி: பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு சவால்?

ஜார்க்கண்ட் தேர்தலில் பலமுனைப் போட்டி: பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு சவால்?
Updated on
1 min read

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இதன் ஆட்சிக்காலம் முடிவடையவுள்ளதை தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ம் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 23-ம் தேதி வெளியாகிறது.

இந்த தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஆளும் பாஜக கட்டணியில் ஜார்கண்ட் மாணவர் அமைப்பு, ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன.

ஜார்க்கண்ட் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஐக்கிய ஜனதாதளம், மற்றொரு கூட்டணி கட்சியான ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பு, லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. அந்த கட்சிகளை சமரசம் செய்யும் பாஜக முயற்சி பெற்ற பெறவில்லை.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்கண்ட் மாணவர் யூனியன் அமைப்புடன் சேர்ந்து ஆட்சியமைத்த நிலையில் இந்த தேர்தலில் அந்த கட்சி தனித்து போட்டியிடுவது பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடந்த மகாராஷ்டிர தேர்தலில் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டபோதிலும் ஆட்சியமைக்க முடியாத சூழல் பாஜவுக்கு உள்ளது.

அதுபோலவே ஹரியாணாவிலும் தேர்தலுக்கு பிறகு ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சியமைத்துள்ளது. எனவே இதுபோன்ற சிக்கல் ஜார்க்கண்டிலும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உறுதியுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் தீவிர பிரச்சாரம் செய்யவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். ஜார்கண்ட்டில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் அளவுக்கு வெற்றி பெற வேண்டும் என அம்மாநில பாஜக நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

அதேசமயம் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சியும் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. இதனால் பலமுனைப் போட்டி நிலவும் சூழல் உள்ளது. பலமுனைப் போட்டியில் வாக்குகள் கடுமையாக பிரியக்கூடும் என்பதால் ஆளும் கூட்டணியை மட்டுமல்லாமல், எதிரணியையும் ஜார்க்கண்ட் தேர்தல் களம் மிரளச் செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in