

ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் காஷ்மீரில் போலீஸார் மீது கல் எறிந்தவர்கள், பிரிவினைவாதிகள் உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. 370-வது பிரிவையும் திரும்பப் பெற்றது. 2 மாதங்களுக்குப் பின் ஜம்மு காஷ்மீர் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமானோர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். இவர்களை விடுவிக்க வேண்டும் என்று பல எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை கைது செய்யப்பட்ட விவரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
மாநிலங்களவையில் இதற்கு பதில் அளித்து உள்துறை இணையமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி பேசுகையில், " ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நிர்வாகம் எடுத்தது.
அந்த வகையில், அமைதியைக் குலைப்பவர்கள், சட்டம் ஒழுங்கிற்குக் குந்தகம் விளைவிப்பவர்கள், கல் எறிந்தவர்கள், பிரிவினைவாதிகள், அரசியல் கட்சிகளின் கூலிகள் உள்ளிட்ட பலரும் கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி 5 ஆயிரத்து 161 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
இதில் இன்னும் கல் எறியும் சம்பவங்களில் ஈடுபட்ட 218 பேர் உள்பட 609 பேர் இன்னும் தடுப்புக் காவலில் உள்ளனர்" எனத் தெரிவித்தார்.
மக்களவையில் காஷ்மீர் மக்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளித்தார். அவர் பேசுகையில், "காஷ்மீரில் 370-வது பிரிவு, 35 ஏ நீக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டாலும், ஜம்மு காஷ்மீர் ஒதுக்கீடு சட்டம் 2004 பொருந்தும். அதாவது, ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களில் இருக்கும் எஸ்சி, எஸ்டி மக்கள் மற்றும் சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கி இருக்கும் மக்களுக்குத் தொடர்ந்து வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.