Published : 20 Nov 2019 02:04 PM
Last Updated : 20 Nov 2019 02:04 PM

ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்குப் பயிர்க்காப்பீட்டு கிளைம் தொகையை அளிக்காத காப்பீட்டு நிறுவனங்கள்

பிரதமர் ஃபாசல் பீமா யோஜனா என்ற விவசாயிகளுக்கான பயிர்க்காப்பீட்டுத் திட்டம் ஒரு தோல்வியடைந்த திட்டமா என்ற கேள்வி விவசாயிகள் தரப்பில் எழுந்துள்ளது. முதல் உதாரணம் மகாராஷ்டிரா விவசாயிகளுக்கு எந்த ஒரு காப்பீட்டு உரிமைத்தொகையும் அளிக்கப்படவில்லை என்பதும் தற்போது ஆயிரக்கணக்கான ராஜஸ்தான் விவசாயிகளுக்கும் கிளைம் தொகை அளிக்கப்படவில்லை.

மாறாக விவசாயிகளின் பிரீமியம் தொகையை விவசாயிகள் கணக்கிற்குத் திருப்பி அளிக்காமல் ஜோத்பூர் மத்திய கூட்டுறவு கமிட்டி வங்கிக்கு இந்திய விவசாய காப்பீட்டு நிறுவனம் (AIC) திருப்பி அளித்துள்ளதும் சர்ச்சையாகியுள்ளது. கூட்டுறவு வங்கி இன்னமும் விவசாயிகள் கணக்கிற்கு இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையை செலுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் விவசாயிகளுக்கு காரிஃப் 2016 மற்றும் 2017-க்கான பயிர்க்காலக்கட்டத்திற்கான காப்பீட்டு உரிமைத் தொகை மறுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் கிராமத் தலைவர் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டு தற்போது ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“காப்பீட்டு கிளைம் தொகை எங்களை வந்தடையவில்லை, மாறாக மற்ற கிராமப்பஞ்சாயத்து விவசாயிகளுக்கு கிளைம் கிடைத்துள்ளது. நாங்கள் கூட்டுறவு வங்கியை அணுகியும் எதுவும் நடக்கவில்லை” என்று சத்லானா கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் பலராம் படேல் தி ஒயர் என்ற ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

மாநில வருவாய் துறை இந்த விவசாயிகளுக்கு 70% விளைச்சல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக நிர்ணயித்துள்ளது. ஆனால் எந்த ஒரு கிளைமும் இவர்களுக்குக் கிடைக்கவில்லை, ஆனால் ரூ.4, 32,793 தொகை பிரீமியம் கட்டப்பட்டுள்ளது.

இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் உயர் நீதிமன்றத்திடம் அளித்த பதிலில், “ரூ. 5,27,11,235.65 தொகை பிரீமியம் தொகை பெற்றோம். இதில் நாங்கள் ரூ. 16,62,856.57 பிரீமியம் தொகையை கூட்டுறவு வங்கியிடத்தில் திருப்பி செலுத்தி விட்டோம். காப்பீட்டு விவரங்கள் பேப்பரிலும் இருக்க வேண்டும் சாஃப்ட் காப்பியும் இருக்க வேண்டும் என்பது விதிமுறை இந்த விஷயத்தில் சாஃப்ட் காப்பி இல்லாத பிரீமியம் தொகையை நாங்கள் திருப்பி விட்டோம்” என்று கூறியது.

ஆனால் காப்பீட்டு விவரங்கள் உரிய வடிவத்தில் இல்லாத போதும் ஏன் பிரீமியம் தொகையைத் திருப்பிச் செலுத்த ஒரு வருடம் எடுத்துக் கொண்டது என்பது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது. ஆனால் விவரங்களை அளிப்பார்கள் அதுவரை காத்திருந்தோம் என்று காப்பீட்டு நிறுவனம் கூறுகிறது.

திரும்பி வந்த தொகையை ஏன் விவசாயிகள் வசம் சேர்க்கவில்லை என்று கூட்டுறவு வங்கியிடம் கேட்ட போது காப்பீட்டு நிறுவனம் திருப்பிச் செலுத்திய தொகை என்னவென்பது எங்களுக்குத் தெரியவில்லை, விவரம் கேட்டும் பதில் இல்லை, எனவே இது எந்தத் தொகை என்று தெரியாமல் எப்படி விவசாயிகளுக்கு திருப்பி அளிப்பது என்கின்றனர்.

மேலும் காரிப் 2017 சீசனுக்கான பயிர்க்காப்பீட்டு கிளைம்கள் 25 விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று காப்பீட்டு நிறுவனம் கூற, கோர்ட்டுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வங்கி விவரங்களில் 7 விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டதான விவரங்களே இருந்தன என்று தி ஒயர் கூறுகிறது.

விவசாயிகள் துயர் தீர்க்க அமல் படுத்தப்பட்ட பிரதமரின் திட்டத்தில் அதன் அமலாக்கத்தில் கோளாறா, அல்லது கோளாறு எங்கே என்று விவசாய அமைப்புகள் கேள்விகள் எழுப்பி வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x