Last Updated : 20 Nov, 2019 01:03 PM

 

Published : 20 Nov 2019 01:03 PM
Last Updated : 20 Nov 2019 01:03 PM

மகாராஷ்டிராவில் டிசம்பர் முதல் வாரத்தில் சிவசேனா தலைமையில் ஆட்சி அமையும்: சஞ்சய் ராவத் நம்பிக்கை

மகாராஷ்டிராவில் டிசம்பர் முதல் வாரத்தில் சிவசேனா தலைமையில் ஆட்சி அமையும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் நம்பிக்கை தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவும் சிவசேனாவும் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருப்பதால், இரு கட்சிக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால் இரு கட்சிகளாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. பெரும்பான்மை இல்லாததால் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராததையடுத்து, அங்குக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், சிவசேனா கட்சி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கியுள்ளது. ஆனால், என்சிபி, காங்கிரஸ் கட்சியும் சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக இன்னும் உறுதியான முடிவு ஏதும் எடுக்காமல் பேச்சுவார்த்தையில் இருந்து வருகின்றன.

இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், என்சிபி தலைவர் சரத் பவாரும் சிவசேனா கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளார்கள். இதனால், சிவசேனா கட்சி தங்கள் தலைமையில் ஆட்சி அமையும் என தீவிரமாக நம்புகிறது.

இந்நிலையில் டெல்லியில் இன்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் ஆட்சி அமைப்பது குறித்துப் பேசி வருகிறோம். அதற்கான பேச்சு நடந்து வருகிறது. டிசம்பர் முதல் வாரத்தில் சிவசேனா தலைமையில்தான் மாநிலத்தில் முதல்வர் பதவி ஏற்பார்.

சில எம்எல்ஏக்களைக் கவர்ந்திழுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வரும் செய்திகள் தவறானவை. எங்கள் எம்எல்ஏக்கள் எங்களுடன்தான் இருக்கிறார்கள். மாநிலத்தில் சிவசேனா ஆட்சி அமையக் கூடாது என்று சிலர் திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள். சிவசேனாவைப் பொறுத்தவரை முடிவு எடுப்பது வேகமாக இருக்கும்.

தலைமை முதல் கீழ்மட்டம் வரை அனைவரிடமும் கலந்து ஆய்வு செய்து, அவர்களின் கருத்துகளைக் கேட்டு தலைவர் எந்த முடிவையும் எடுப்பார். அதேபோல என்சிபி கட்சியும் ஜனநாயக முறையில் அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்து பேசி முடிவு எடுக்கச் சிறிது தாமதம் ஆகலாம். நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சி எந்த முடிவு எடுத்தாலும் அதற்குரிய முறையில் கலந்துபேசித்தான் எடுப்பார்கள்.

ஆதலால், மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக நாளை அல்லது இரு நாட்களில் நல்ல முடிவு கிடைத்துவிடும்.
என்சிபி தலைவர் சரத் பவார் இன்று பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளார். இதில் எந்தவிதமான அரசியலும் இல்லை என நினைக்கிறேன். மாநிலத்தில் உள்ள விவசாயிகள் நலன், நிவாரண உதவிக்காகப் பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளார்.

அதுபோலவே, தேவைப்பட்டால், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும், விவசாயிகள் நலனுக்காகவும், மாநிலத்தின் நலனுக்காகவும் பிரதமர் மோடியைச் சந்திப்பார். விவசாயிகள் நலனுக்காக எங்கள் தலைவர் யாரை வேண்டுமானாலும் சந்திப்பார்''.

இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x