Last Updated : 20 Nov, 2019 11:37 AM

 

Published : 20 Nov 2019 11:37 AM
Last Updated : 20 Nov 2019 11:37 AM

அயோத்தியில் இருந்து ஜனக்பூருக்கு ராமர் ஊர்வலம்: பிரதமர் மோடி, யோகிக்கு விஎச்பி அழைப்பு

அயோத்தியில் இருந்து நேபாலின் ஜனக்பூருக்கான ராமர் ஊர்வலம் இந்தமுறை விமரிசையாக நடத்த விஷ்வ இந்து பரிஷத்(விஎச்பி) திட்டமிட்டுள்ளது. இதில் முதன்முறையாக கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தியை சேர்ந்த ராமர் அருகிலுள்ள நேபாலின் ஜனக்பூரில் நடைபெற்ற சுயம்வரத்தில் கலந்துகொண்டு சீதையை மணமுடித்தார் என ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனக்பூரில் சீதை பிறந்த இடமாகக் கருதி அங்கு பெரிய அளவில் ராம்-ஜானகி கோயில் அமைந்துள்ளது. இங்கு ராம்-சீதா திருமணம் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இதற்காக, உ.பி.யின் அயோத்தியில் இருந்து ராமர் ஊர்வலம் கிளம்பி ஜனக்பூரை அடைகிறது. விஎச்பி சார்பில் இந்த ஊரவலத்தை 2002 -ம் ஆண்டு முதல் அயோத்தியின் தர்மயாத்ரா மகாசங்கம் நடத்தி வருகிறது.

இந்நிலையில், கடந்த 9 -ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியுள்ளது. இதனால், அயோத்தியின் சாதுக்கள் பெருமகிழ்ச்சியில் உள்ளனர்.

எனவே, இந்தமுறைக்கான ராமர் ஊர்வலம் நாளை நவம்பர் 21 -ல் அயோத்தியில் இருந்து தொடங்குகிறது. இது, நவம்பர் 28 - ம் தேதி ஜனக்பூர் சேர்ந்த பின் விழாக்கள் துவங்குகின்றன.

இதில், அயோத்தியின் முக்கிய சாதுக்களும், ராம்பக்தர்களும் என சுமார் 200 பேர் கலந்து கொள்கின்றனர். ஜனக்பூரில் நடைபெறும் நவம்பர் 28 விழாவில் கலந்துகொள்ள விஎச்பி சார்பில் பிரதமர் மோடி மற்றும் உபி முதல்வர் யோகிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் அயோத்தியில் விஎச்பி தலைமையகத்தின் செய்தி தொடர்பாளர் சரத் சர்மா கூறும்போது, ‘2004 முதல் நடைபெறும் இந்த தர்மயாத்ரையில் பிரதமர் மோடி 2014 இல் கலந்துகொள்ள விரும்பினார். சில முக்கிய காரணங்களால் தவறிய வாய்ப்பை அவர் இந்தமுறை பயன்படுத்துவார் என நம்புகிறோம்.’ எனத் தெரிவித்தார்.

இதனிடையே, ராமர் ஊவலத்தில் கலந்துகொள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து முக்கிய சாதுக்கள் அயோத்தி அடைந்துள்ளனர். இவர்களது ஊர்வலம் ஜனக்பூர் அடைந்த பின் நவம்பர் 29 -ல் அங்குள்ள தசரதர் கோயிலில் திலக உற்சவம் நடைபெறும்.

இதை தொடர்ந்து அங்குள்ள ராம்-ஜானகி கோயிலில் கன்னி பூசை, தனுஷ் யாகம், ராம் லீலா ஆகியவை டிசம்பர் 2 வரை நடைபெறுகிறது. இதன் பிறகு டிசம்பர் 3 இல் தர்ம யாத்திரை அயோத்தி திரும்ப உள்ளது.

இதுகுறித்து சரத் சர்மா மேலும் கூறும்போது, ‘இந்த ஊர்வலத்தில் ரதம் போல் அமைக்கப்பட்ட இரண்டு வாகனங்கள் முன்வகிக்கும். இதில் அமர்ந்தபடி ஸ்ரீராமஜென்ம பூமி நியாஸின் தலைவர் நிருத்திய கோபால் தாஸ் தலைமை வகிப்பார்.’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x