அயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் சட்டவாரிய முடிவில் உடன்பாடில்லை: சன்னி வக்போர்டு கருத்து

அயோத்தி வழக்கில் சீராய்வு மனு: முஸ்லிம் சட்டவாரிய முடிவில் உடன்பாடில்லை: சன்னி வக்போர்டு கருத்து
Updated on
1 min read

அயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்யப்போவதில்லை, இதுகுறித்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எடுக்கும் முடிவில் எங்களுக்கு உடன்பாடில்லை என உத்தர பிரதேச மாநில மத்திய சன்னி வக்போர்டு தெளிவுபடுத்தியுள்ளது.

நூற்றாண்டு காலமாக நீடித்த அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நிலவழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அது மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கு அயோத்தி நகருக்குள் உரிய, சரியான இடத்தில் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்வது குறித்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூடி விவாதித்தது. தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்யப் போவதாக முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு ஜமாத்-எ- உலமா இந்த் ஆதரவு தெரிவித்தது.

எனினும் உ.பி. மத்திய சன்னி வக்போர்டு, ஷியா வக்போர்டு ஆகியவை மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய விருப்பமில்லை என தெரிவித்து விட்டன. அதுபோலவே முதன்முதலில் வழக்கு பதிவு செய்த மனுதாரரின் வாரிசான இக்பால் அன்சாரி உள்ளிட்டாரும் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என அறிவித்து விட்டனர்.

அதேசமயம் மனுதாரர்களில் முகமது உமர், மிஸ்பகுதீன், மவுலானா மஹபூப் ரஹ்மான், ஹாஜி மஹபூப், ஹாஜி ஆசாத், ஹபீஸ் ரிஸ்வான், மவுலானா ஹிஸ்புல்லா ஆகிய 7 பேர் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில் அயோத்தி விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை உ.பி. மத்திய சன்னி வக்போர்டு மீண்டும் தெளிவுப்படுத்தியுள்ளது. இதுகுறித்து வக்போர்டு தலைவர் சுபர் பரூக்கி கூறியதாவது:

‘‘எங்களை பொறுத்தவரை இந்த வழக்கின் தீர்ப்பை முழுமையாக ஏற்கிறோம். மறு சீராய்வு செய்ய வலியுறுத்த மாட்டோம் என்பதை முன்பே தெளிவுபடுத்தி விட்டோம். அயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யும் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் முடிவில் எங்களுக்கு உடன்பாடில்லை. அதேசமயம் அவர்கள் முடிவில் நாங்கள் தலையிட முடியாது. எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.’’ எனக் கூறினார்.

இதுபோலவே மற்றொரு மனுதாரரான இக்பால் அன்சாரியும், மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என மீண்டும் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in