Published : 20 Nov 2019 11:08 AM
Last Updated : 20 Nov 2019 11:08 AM

கோவாவில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் பங்கேற்கும் சர்வதேச திரைப்பட விழா இன்று தொடக்கம்

50-வது கோவா சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி வரும் 28-ம் தேதி நடைபெறுகிறது. 9 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 76 நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நடக்கும் தொடக்க விழாவில் பிரபல நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். வரும் 28-ம் தேதிவரை நடக்கும் திரைப்படவிழாவை அமிதாப் பச்சன் தொடங்கி வைக்கிறார். பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் இந்நிகழ்வில் இசையமைப்பாளர் சங்கர் மகாதேவனின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருதும், ரஜினிக்கு ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ விருதும் வழங்கப்படுகிறது. அமிதாப்பை கவுரவிக்கும் வகையில் அவர் நடித்த 6 படங்கள் திரையிடப்படுகின்றன. இதேபோல பொன்விழா ஆண்டையொட்டி சிறந்த 12 திரைப்படங்களின் வரிசையில் கே.பாலசந்தர் இயக்கிய ‘இரு கோடுகள்' திரையிடப்படுகிறது.

9 நாட்கள் நடக்கும் இந்த திரைப்பட விழாவில் சர்வதேசம், இந்தியன் பனோரமா உட்பட பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்கள் 3 இடங்களில் திரையிடப்படுகின்றன. ஈரான், கொரியா, பிரான்ஸ் உட்பட 76 நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பல்வேறு மொழி திரைப்படங்களும், இந்தி, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை சேர்ந்த 41 திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன.

இப்பிரிவில் பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7' மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ‘ஹவுஸ் ஓனர்' ஆகிய 2 தமிழ்த் திரைப்படங்களும் தேர்வாகியுள்ளன. இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர்கள் மிஷ்கின், வெற்றிமாறன், ராம், விக்னேஷ் சிவன், நடிகைகள் நித்யா மேனன், தமன்னா, டாப்சி உள்ளிட்டோர் திரை தொழில்நுட்பம் சார்ந்து பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

அண்மையில் மறைந்த திரை பிரபலங்களான கிரேஸி மோகன், கன்னட நாடக ஆசிரியரும், நடிகருமான கிரீஷ் கர்னாட் உள்ளிட்டோருக்கு அஞ்சலியும் செலுத்தப்படவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x