‘‘சிறுபான்மை வாக்குகள் பறிபோய் விடுமோ என பயம்’’- மம்தா மீது ஒவைசி கட்சி மீண்டும் விமர்சனம் 

‘‘சிறுபான்மை வாக்குகள் பறிபோய் விடுமோ என பயம்’’- மம்தா மீது ஒவைசி கட்சி மீண்டும் விமர்சனம் 
Updated on
1 min read

மேற்குவங்க மாநிலத்தில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் தங்களை விட்டு மற்ற கட்சிக்கு சென்று விடுமோ என முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பயம் ஏற்பட்டுள்ளதாக ஏஐஎம்ஐஎம் கட்சி விமர்சித்துள்ளது.

மேற்குவங்க மாநிலம் கூச் பிஹாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசுகையில் ‘‘இந்துக்களில் ஒரு சிலரிடம் தீவிரவாத போக்கு இருப்பதுபோலவே தற்போது சிறுபான்மை மக்களிடமும் ஒரு சிலரிடம் இந்த போக்கு உள்ளது.

இதற்காகவே சில அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. இந்த கட்சிகள் பாஜகவிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு சிறுபான்மை மக்களின் வாக்குகளை பிரிக்கப் பார்க்கின்றன. ஆனால் அவர்கள் மேற்குவங்கத்தில் இல்லை, ஹைதராபாத்தில் இருக்கின்றனர்’’ என பேசினார்.

இதற்கு ஹைதராபாத் எம்.பி.யும், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவருமான அசாதுதீன் ஒவைசி பதிலளித்தார். அவர் கூறுகையில் ‘‘மம்தா பானர்ஜி என் மீது குற்றம்சாட்டியுள்ளார். இதன் மூலம் மேற்குவங்கத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்களுக்கு ஒரு தகவலை கூறியுள்ளார். அந்த மாநிலத்தில் எங்கள் கட்சி அசைக்க முடியாத சக்தி என்பதையும், வளர்ந்து வரும் பெரும் அரசியல் கட்சி என்பதையும் அவர் உணர்ந்துள்ளார்.’’ எனக் கூறியுள்ளார்.

இதனால் இருகட்சிகள் இடையே அரசியல் மோதல் வலுத்து வருகிறது. இந்தநிலையில் ஏஐஎம்ஐஎம் கட்சி மேற்குவங்க மாநில தலைவர் சமுருல் ஹசன் மீண்டும் மம்தா பானர்ஜியை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

‘‘மேற்கு வங்க மாநிலத்தில் எங்கள் கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் முதல்வர் மம்தா பானர்ஜி எங்களை பார்த்து அஞ்சுகிறார். சிறுபான்மை மக்களின் வாக்குகள் தங்களை விட்டு சென்று விடுமோ என பயப்படுகிறார்.

அதனால் தான் எங்கள் தலைவர் ஒவைசியை அவர் விமர்சிக்கிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே நாங்கள் போட்டியிட விரும்பினோம். ஆனால் பாஜக பலம் பெற்று விடக்கூடாது என்பதால் ஒவைசி அனுமதிக்கவில்லை.’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in