Published : 20 Nov 2019 11:00 AM
Last Updated : 20 Nov 2019 11:00 AM

அயோத்தி வழக்கில் மறுஆய்வு மனு அளிப்பதை கண்டித்து முஸ்லிம் அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி

அயோத்தி வழக்கில் அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) மறுஆய்வு மனு அளிக்க முடிவு செய்துள்ளது. இதை கண்டித்து உத்தரபிரதேசத்தின் லக்னோவில் முஸ்லிம் கர்சேவக் மன்ச் எனும் அமைப்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றது.

அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 9-ம் தேதி தீர்ப்பளித்தது. தமக்கு எதிராக அமைந்த இந்த தீர்ப்பை எதிர்த்து முஸ்லிம் தரப்பினர், மறுஆய்வு மனு தாக்கல் செய்கின்றனர். இதுதொடர்பாக ஏஐஎம்பிஎல்பியின் நிர்வாகக் குழுவினர் கடந்த 17-ம் தேதி லக்னோவில் கூடி முடிவு எடுத்திருந்தது.

இந்நிலையில், ஏஐஎம்பிஎல்பியின் முடிவுக்கு முஸ்லிம் கர்சேவக் மன்ச் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்காக அந்த அமைப்பின் சார்பில் ஏஐஎம்பிஎல்பி அமைப்பு இறந்து விட்டதாகக் கூறி அதற்கு ஜனஸா(சவம்) ஊர்வலம் நடத்த முயன்றனர். இதில் பயன்படுத்திய சவப்பெட்டி மீது ஏஐஎம்பிஎல்பி என்ற பேனர் இந்தியில் எழுதி போர்த்தப்பட்டிருந்தது.

இந்த ஊர்வலம் நடத்த லக்னோவின் விகாஸ் நகர் பகுதியில் தலையில் தொப்பி அணிந்தபடி மன்ச் அமைப்பினர் சுமார் 20 பேர் கூடினர். அப்போது அங்கிருந்த விகாஸ் நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸார், ஆர்ப்பாட்டம் நடத்த முன் அனுமதி பெறவில்லை என்று கூறி ஊர்வலத்தை தடுத்து விட்டனர். ஏற்கனவே, லக்னோவில் அயோத்தி வழக்குக்கு முன்பாக அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் முஸ்லிம் கர்சேவக் மன்ச்சின் தலைவரான குன்வர் ஆஸம்கான் கூறும்போது, “மதநல்லிணக்கத்துடனான அமைதியை விரும்பும் இந்திய முஸ்லிம்கள் எண்ணத்தை இந்த ஏஐஎம்பிஎல்பியினர் மறுஆய்வு மனு அளித்து குலைக்க விரும்புகின்றனர். அயோத்தி பிரச்சினை 9-ம் தேதி வெளியான தீர்ப்புடன் முடிவுக்கு வந்து விட்டது. இனி 5 ஏக்கர் நிலத்தை அரசிடம் பெற்று மசூதியுடன் சேர்த்து முஸ்லிம்களின் நலன்களில் ஈடுபட வேண்டுமே தவிர பிரச்சினையை வளர்க்கக் கூடாது’ என்றார்.

இதனிடையே, ஏஐஎம்பிஎல்பி முடிவு தொடர்பாக உ.பி. சன்னி மத்திய வக்ஃபு வாரியம் நவம்பர் 26-ம் தேதி கூடி ஆலோசனை செய்ய இருப்பதாகக் கூறி உள்ளது. இந்த அமைப்பு அயோத்தி வழக்கில் முஸ்லிம் தரப்பின் முக்கிய மனுதாரர்களில் ஒன்று ஆகும். இதே கூட்டத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அரசு அளிக்கும் 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது குறித்தும் முடிவு எடுக்கப்படும். வக்ஃ்பு வாரியத்தின் தலைவரான ஜுபர் பரூக்கீ, உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியான அன்று தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யும் எண்ணம் இல்லை எனக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x