திடீர் திருப்பம்: பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் சரத் பவார்: முடிவுக்கு வருமா மகாராஷ்டிர அரசியல் குழப்பம்?

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

பிரதமர் மோடியை சரத் பவார் இன்று சந்தித்து பேசவுள்ளார். அப்போது மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவது தொடர்பாக பேசப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிராவில் தேர்தலில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. எனினும் புதிய அரசு அமைப்பதில் முதல்வர் பதவிக்கான போட்டியால் இரு கட்சிக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் சிவசேனா இருக்கிறது.

ஆனால், என்சிபி, காங்கிரஸ் கட்சியும் சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக இன்னும் உறுதியான முடிவு ஏதும் எடுக்கவில்லை. பேச்சுவார்த்தை மட்டுமே நடந்து வருகின்றன. சிவசேனா கட்சி தங்கள் தலைமையில் ஆட்சி அமையும் என தீவிரமாக நம்புகிறது.

ஆட்சி அமைக்கும் எண்ணத்துடன் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து குறைந்தபட்ச செயல் திட்டம் வகுத்து அதன்படி நடக்க திட்டமிட்டு வருகின்றன. இந்தநிலையில் சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக இரு தினங்களுக்கு முன்பு சரத் பவார் அளித்த பேட்டியில் உறுதியாக எதையும் தெரிவிக்கவில்லை.

‘‘சிவசேனா-பாஜக இணைந்து தேர்தலைச் சந்தித்தார்கள், என்சிபி-காங்கிரஸ் இணைந்து தேர்தலைச் சந்தித்தோம். அவர்கள் அவர்களின் வழியில் அரசியல் செய்யட்டும். நாங்கள் எங்கள் வழியில் அரசியல் செய்கிறோம்’’ என்று சரத் பவார் தெரிவித்தார்.

இதனிடையே நாடாளுமன்றத்தில் மிகவும் கண்ணியமுடன் நடப்பவர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் என பிரதமர் மோடி மாநிலங்களவையில் பாராட்டு தெரிவித்தார்.

இந்த சூழலில் பிரதமர் மோடியை சரத் பவார் இன்று சந்தித்து பேசவுள்ளார். மகாராஷ்டிராவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதற்காக அவர் பிரதமரை சந்திக்கவுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மாலிக் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இருதலைவர்களின் சந்திப்பின்போது மகாராஷ்டிர அரசியல் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவது தொடர்பாக பல நாட்களாக நீடித்து வரும் அரசியல் குழப்பத்துக்கு தீர்வு கிடைக்கும் என கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in