Last Updated : 19 Aug, 2015 03:52 PM

 

Published : 19 Aug 2015 03:52 PM
Last Updated : 19 Aug 2015 03:52 PM

புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது: கேஜ்ரிவால், ராகுல் ஆவேசம்

வன்முறையில் ஈடுபட்டதாக, மத்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் (எப்டிஐஐ) மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டதற்கு, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புனே திரைப்படக் கல்லூரி நிறுவனத்தின் தலைவராக பாஜகவைச் சேர்ந்த டி.வி. நடிகர் கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இக்கல்லூரி மாணவர்கள் கடந்த ஜூன் 12-ம் தேதி முதல் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் கடந்த ஜூலை 3-ம் தேதி டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மாணவர்களுடன் மீண்டும் பேச்சு நடத்த தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மறுத்துவிட்டது.

இதன் தொடர்ச்சியாக, நேற்று (திங்கள்கிழமை) மாலை, இம்மாணவர்கள் கல்லூரி இயக்குநர் பிரசாந்த் பத்ரபியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 2008-ம் ஆண்டு பேட்ச் மாணவர்கள் டிப்ளமோ தொடர்பான திரைப்படங்களை மதிப்பீடு செய்ய பிரசாந்த் அனுமதி அளித்தை கண்டித்து மாணவர்கள் இப்போராட்டம் நடத்தினர். இதனால், இயக்குநர் பிரசாந்த் பத்ரபி சுமார் 5 மணி நேரம் தனது அறையை விட்டு வெளியேற முடியாமல் தவித்தார்.

இதையடுத்து, அவர் அளித்த புகாரின் பேரில் 15 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் எப்டிஐஐ மாணவர் சங்கத் தலைவர் விகாஸ் உட்பட 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இயக்குநர் அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள், மேசை, நாற்காலிகள், மற்றும் கம்யூட்டர்களை சேதப்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மாணவர்கள் தரப்பில் கூறும்போது, "எப்டிஐஐ அகடமிக் கவுன்சில் ஒப்புதல் இல்லாமல் முந்தைய ஆண்டு டிப்ளமோ தொடர்பான திரைப்படங்களை மதிப்பீடு செய்ய இயக்குநர் அனுமதி அளித்தது தவறு. தற்போதைய போராட்டத்தை பலவீனப்படுத்தவே அவர் இவ்வாறு செய்துள்ளார்" என்றனர்.

கேஜ்ரிவால் உறுதுணை

புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மீதான நடவடிக்கை அதிர்ச்சியளிப்பதாக ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், மத்திய அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அத்துடன், திரைப்படக் கல்லூரி மாணவர்களின் தற்காலிக வகுப்புகளுக்கு இடம் அளிக்க டெல்லி அரசு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் ஆவேசம்

இதனிடையே, "போராட்ட மாணவர்கள் நள்ளிரவில் கைது செய்தது தவறு. நமது மாணவர்கள் கிரிமினல்கள் அல்ல மோடிஜி. மவுனம். சஸ்பெண்ட். கைது. - இதுவே மோடியின் இன்றைய மந்திரம்" என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x