Published : 20 Nov 2019 08:00 AM
Last Updated : 20 Nov 2019 08:00 AM

காஷ்மீரில் தீவிரவாதிகள் பதுங்குமிடம் கண்டுபிடிப்பு: வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் பறிமுதல்

காஷ்மீரில் தீவிரவாதிகள் பதுங்குமிடத்தை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்துள்ளனர். அங்கிருந்து ஏராளமான வெடிகுண்டுகள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கு தாக்குதல் நடத்த பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத இயக்கங்கள் முயற்சி செய்து வருகின்றன. இதற்காக, அந்நாட்டு ராணுவத்தின் உதவியுடன் காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவி வருவதாக உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

இதன் காரணமாக, காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவத்தினரும், போலீஸாரும் முடுக்கிவிட்டுள்ளனர். இந்நிலையில், காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள தாயிர் வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், போலீஸார், ராணுவத்தினர் அடங்கிய பாதுகாப்புப் படையினர் நேற்று அதிகாலை அப்பகுதிக்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள ஓர் இடத்தில் மரக்கட்டைகளை கொண்டு அமைக்கப்பட்ட சிறிய அளவிலான வீடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அங்கு சென்று பார்த்தபோது, ஏராளமான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. எனினும், அங்கு தீவிரவாதிகள் யாரும் இல்லை. போலீஸாரிடமிருந்து தப்பிச் செல்லும் தீவிரவாதிகள், தாங்கள் பதுங்குவதற்காக இந்த இடத்தை பயன்படுத்தி வந்ததாக ராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐ.இ.டி. வெடிபொருட்கள், கையெறி குண்டுகள், இயந்திரத் துப்பாக்கிகள், வாக்கி டாக்கி உள்ளிட்டவற்றை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும், அந்தப் பகுதியில் தீவிரவாதிகளை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x