Published : 20 Nov 2019 07:57 AM
Last Updated : 20 Nov 2019 07:57 AM

தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் சார்பில் செயற்கைக்கோள் வடிவமைப்பு போட்டி: 8 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம்

தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் (என்டிஆர்எஃப்) தலைவரும், விஞ்ஞானியுமான‌ மயில்சாமி அண்ணா துரை மற்றும் இயக்குநர் வி.டில்லிபாபு ஆகியோர் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெங்களூருவில் உள்ள தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு கடந்த 50 ஆண்டுகளாக தேசிய அளவில் அறிவியல், பொறியியல் துறைகளில் ஆராய்ச்சிமுயற்சிகளை ஒருங்கிணைத்து சேவையாற்றி வருகிறது. இதன் பொன்விழா ஆண்டையொட்டி, இந்த ஆண்டு தேசிய அளவிலான செயற்கைக் கோள் வடிவமைப்பு போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டியில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம். ஒரு குழுவில் அதிகபட்சம் 5 மாணவ-மாணவிகள் இருக்கலாம்.

3.8 செ.மீ கன சதுரத்திற்குள் அதிகபட்சம் 50 கிராம் எடை வரை மாணவர்கள் தங்களின் புதுமையான யோசனைகளின் மூலம் செயற்கைகோளின் தாங்குசுமையை (Pay Load) வடிவமைக்க வேண்டும். இதில் புதுமையான வடிவமைப்பு, செயல்படும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த 12 யோசனைகள் தேர்ந்தெடுக்கப்படும். தேர்வான மாணவர்களுக்கு செயற்கைக்கோள் வடிவமைப்பு தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். முப்பரிமாணத்தில் அச்சிடப்பட்ட 3.8 செ.மீ கன சதுர செயற்கைக்கோள் பெட்டியும் இலவசமாக வழங்கப்படும். இறுதியில் தேர்வு செய்யப்பட்ட மாணவ குழுக்களின் 12 செயற்கைக்கோள்கள் சென்னையிலிருந்து ஏவப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

என்.டி.ஆர்.எஃப் நிறுவனத்தின் இணைய‌தளத்தில் www.ndrf.res.in மாணவர்கள் தங்கள் விவரங்களையும் புதுமையான செயற்கைக்கோளின் தாங்கு சுமை யோசனைகளையும் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 25-ம் தேதி. விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது. தேர்ந்தெடுக்கப்படும் மாணவ குழுக்களுக்கு பயணப்படி அல்லது தங்கும் வசதி வழங்கப்பட மாட்டாது. போட்டியின் முடிவுகள் டிசம்பர் 15-ம் தேதி என்.டி.ஆர்.எஃப் இணைய‌தளத்தில் அறிவிக்கப்படும்.போட்டி குறித்த சந்தேகங்களுக்கு ndrf85@gmail.com என்ற மின்னஞ்சலிலும், 080 2226 4336 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x