Published : 19 Nov 2019 05:42 PM
Last Updated : 19 Nov 2019 05:42 PM
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த வாரம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 961 வார்டுகளில் வென்றுள்ளது. பாஜக 737 வார்டுகளை மட்டுமே கைப்பற்றியது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில், 24 மாவட்டங்களில் உள்ள 49 உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கடந்த வாரம் சனிக்கிழமை தேர்தல் நடந்தது. இதில் 3 மாநகராட்சிகள், 18 நகராட்சி கவுன்சில், 28 நகராட்சிகளுக்குத் தேர்தல் நடந்தது.
இதில் மொத்தம் 71.53 சதவீத வாக்குகள் பதிவாகின. 7,942 ஆண் வேட்பாளர்களும், 2,832 பெண் வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.
தேர்தல் முடிந்த நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 2,105 வார்டுகளில் காங்கிரஸ் கட்சி பாதிக்கும் மேலான இடங்களில் வென்றுள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பின் சந்திக்கும் முதல் உள்ளாட்சித் தேர்தல் இதுவாகும். இதில் கிடைத்த வெற்றி அந்தக் கட்சிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
பாஜக கடந்த 10 ஆண்டுகளாக இங்கு ஆண்டு வந்த நிலையில் 737 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 16 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 வார்டுகளிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் வென்றுள்ளது
தேர்தல் முடிவு குறித்து முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், "தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்ததுபோலவே வந்துள்ளன. அரசின் சிறந்த செயல்பாட்டுக்கு மக்கள் அளித்த தீர்ப்பாகவே இதைப் பார்க்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.