Published : 19 Nov 2019 05:02 PM
Last Updated : 19 Nov 2019 05:02 PM
மகாராஷ்டிராவில் பாஜகவை வளர்த்துவிட்டதே நாங்கள்தான். இன்று நாடாளுமன்றத்தில் எங்களை இடம் மாற்றி அமர வைக்கிறார்கள். இதற்கு நிச்சயம் விலை கொடுப்பார்கள் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் வேதனை தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவும், சிவசேனாவும் முதல்வர் பதவிக்கான போட்டியால் இரு கட்சிக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் சிவசேனா இருக்கிறது.
ஆனால், என்சிபி, காங்கிரஸ் கட்சியும் சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக இன்னும் உறுதியான முடிவு ஏதும் எடுக்காமல் பேச்சுவார்த்தையில் இருந்து வருகின்றன. இதனால், சிவசேனா கட்சி தங்கள் தலைமையில் ஆட்சி அமையும் என தீவிரமாக நம்புகிறது.
இந்நிலையில், சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக நேற்று சரத் பவார் தெரிவித்த கருத்துகள் குறித்து சிவசேனா எம்.பி சஞ்சய்ராவத்திடம் இன்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
மும்பையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
''நீங்கள் சரத் பவார் குறித்தும் எங்கள் கூட்டணி குறித்தும் கவலைப்படாதீர்கள். மிக விரைவில், டிசம்பர் முதல் வாரத்தில் சிவசேனா தலைமையில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமையும். அது நிலையான ஆட்சியாக இருக்கும்.
மகாரஷ்டிராவில் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைவதில் எந்தவிதமான குழப்பமும் இல்லை. ஆனால், ஊடகங்கள்தான் இதில் தலையிட்டு ஏராளமான குழப்பத்தை ஏற்படுத்துகின்றன
என்சிபி தலைவர் சரத் பவாரை நேற்று இரவு சந்தித்தேன். அப்போது அவரிடம் மகாராஷ்டிர விவசாயிகள் நிலை, அவர்களுக்கு நிவாரணத் தொகை குறித்துப் பேசினேன்.
பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் சரத் பவாரைப் புகழ்ந்து பேசியதில் என்ன தவறு இருக்கிறது. இதற்கு முன் நடந்த கூட்டத்தில் சரத் பவார் எனது அரசியல் குரு. இதில் அரசியல் செய்யாதீர்கள். உண்மையைச் சொல்கிறேன் என்று பிரதமர் மோடி பேசி இருந்தார்.
சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான உறவு முறிந்துவிட்டது. மிகப்பழமையான தோழமையை பாஜக இழந்துவிட்டது.
மகாராஷ்டிராவில் பாஜகவை வளர்த்தெடுத்தது சிவசேனா கட்சிதான். அவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட இடம் கொடுத்து, அரவணைத்தோம். ஆனால், இன்று நாடாளுமன்றத்தில் சிவசேனாவின் இருக்கையை பாஜக மாற்றி அமைக்கிறது. நிச்சயம் பாஜக இதற்கான விலையைக் கொடுக்கும்.
கடந்த காலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க சிவசேனா தயக்கம் காட்டியது. ஆனால் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை மாத்தோஸ்ரீ இல்லத்தில் சந்தித்த பின்புதான் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டோம். கூட்டணியில் உள்ள சிக்கல்கள் குறித்துப் பேசினோம்".
இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.