

மக்களவையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டால், நடவடிக்கை எடுக்கும் முடிவுக்குத் தள்ளாதீர்கள் என அவைத்தலைவர் கடும் எச்சரிக்கை விடுத்தார்
மக்களவை இன்று கூடியதும் அவையின் மையப் பகுதிக்குக் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிஸ் எம்.பி.க்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டார்கள்.
ஒரு கட்டத்தில் அவையின் மையப்பகுதிக்கு வந்து எம்.பிக்கள் முழக்கமிட்டனர். கேள்வி நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும், தயவு செய்து எம்.பி.க்கள் இருக்கையில் அமருங்கள் என்று சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார்.
ஆனால் காங்கிரஸ் எம்.பி.க்கள், சமீபத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு சிறப்பு பாதுகாப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததைக் கண்டித்து கோஷமிட்டனர்.
மத்திய அரசு பழிவாங்கும் அரசியலைக் கைவிட வேண்டும், சர்வாதிகாரம் வேண்டாம், நீதி வேண்டும் என்று கூறி எம்.பி.க்கள் முழுக்கமிட்டு மையப்பகுதியில் நின்றனர்.
விவசாயிகள் பிரச்சினை குறித்துப் பேச வேண்டும் எம்.பி.க்கள் அனைவரும் தங்கள் இருக்கையில் அமருங்கள். இன்று விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக பல்வேறு விஷயங்கள் பேச வேண்டியுள்ளது என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால், எம்பி.க்கள் யாரும் மையப்பகுதியைவிட்டு நகரவில்லை. இதனால் சிறிது கோபப்பட்ட மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறுகையில், " இதற்கு முன் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிடும் வழக்கம் இருந்திருக்கலாம். ஆனால், இன்றுமுதல் யாரும் மையப்பகுதிக்கு வந்து கோஷமிடக்கூடாது. அவ்வாறு இல்லாவிட்டால், நான் எம்.பி.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது இருக்கும்" எனச் எச்சரித்தார்