Last Updated : 19 Nov, 2019 12:19 PM

 

Published : 19 Nov 2019 12:19 PM
Last Updated : 19 Nov 2019 12:19 PM

'ராணுவ உடை' போன்று மார்ஷல் சீருடை: மாநிலங்களவை எம்.பி.க்கள் அதிருப்தி; எதிர்ப்பால் பரிசீலிக்க முடிவு

மாநிலங்களவையின் காவலர்கள் (மார்ஷல்) சீருடை மாற்றப்பட்டு ராணுவ உடை போன்று சீருடை வழங்கப்பட்டதற்கு எம்.பி.க்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து மறுபரிசீலனை செய்ய உத்தரவிடுவதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மாநிலங்களவைத் தலைவருக்கு அருகே நிற்கும் மார்ஷல்கள் வழக்கமாக இந்தியப் பாரம்பரிய குர்தா உடையிலும், தலையில் தலைப்பாகையும் கட்டி இருப்பார்கள். இதுதான் நீண்டகாலமாக அவர்களின் சீருடையாக இருந்து வந்தது.

ஆனால், நேற்று கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் எந்தவிதமான அறிவிப்பும் இன்றி மார்ஷல்கள் சீருடை மாற்றப்பட்டு, ராணுவப் பச்சை (ஆலிவ் கிரீன்) நிறத்தில் ராணுவ உடை போன்று சீருடையும், தலையில் தொப்பியும் வழங்கப்பட்டது.

சீருடை முற்றிலும் மாற்றப்பட்டு இருந்தது குறித்து எம்.பி.க்கள் அனைவரும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் அதிருப்தி தெரிவித்தனர். சில எம்.பி.க்கள் ராணுவ உடை தோற்றத்தில் காவலர்கள் இருப்பதைப் பார்த்து விமர்சித்துள்ளார்கள்.

முன்னாள் ராணுவத் தலைவர் வி.வி.மாலிக் உள்ளிட்ட பலரும் மாநிலங்களவை மார்ஷல்களுக்கு ராணுவ உடை போன்ற தோற்றத்தில் சீருடை அளிக்கப்பட்டதை விமர்சித்துள்ளார்கள்.

நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வரும் சீருடையில் மார்ஷல்கள்

வி.பி.மாலிக் ட்விட்டரில் கூறுகையில், "ராணுவப் பிரிவில் இல்லாதவர்கள் ராணுவ உடை போன்ற தோற்றத்தில் ஆடையை அணிவது சட்டவிரோதம், பாதுகாப்புக்கு ஆபத்தானது. மாநிலங்களவைச் செயலாளர், மாநிலங்களவைத் தலைவர், ராஜ்நாத் சிங் ஆகியோர் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

இந்த விமர்சனத்தை மத்திய அமைச்சரும், முன்னாள் ராணுவ ஜெனரலுமான வி.கே.சிங் ஏற்றுக்கொண்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் நேற்று அவையில் வெங்கய்ய நாயுடுவிடம் இதுகுறித்துப் பேசுகையில், ''மார்ஷல்களுக்கு ராணுவத் தோற்றத்தில் சீருடை வழங்கியதன் மூலம், அவையில் ராணுவச் சட்டத்தைப் புகுத்தும் திட்டமா'' எனக் கேட்டார். உடனே, வெங்கய்ய நாயுடு, "முக்கியமான நேரத்தில் இதுபோன்ற முக்கியமில்லாத கேள்விகளைக் கேட்காதீர்கள்’’ எனக் கண்டித்தார்.

மாநிலங்களவை எம்.பி.க்கள் மத்தியில் கடும் அதிருப்தியும் விமர்சனமும் வந்ததைத் தொடர்ந்து, மார்ஷல்கள் சீருடையை மறுபரிசீலனை செய்வதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

வெங்கய்ய நாயுடு இன்று அவையில் கூறுகையில், "மார்ஷல்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய சீருடை தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும், ஆலோசனைகளும், கருத்துகளும் அரசியல் கட்சிகளில் இருந்தும், முக்கியமான நபர்களிடம் இருந்தும் வந்துள்ளன. ஆதலால் சீருடையை மறுபரிசீலனை செய்யச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x