திண்டிவனத்தில் இரு புதிய ரயில் பாதைகளுக்கு நிதி: மக்களவையில் விஷ்ணு பிரசாத் எம்.பி. வலியுறுத்தல்

திண்டிவனத்தில் இரு புதிய ரயில் பாதைகளுக்கு நிதி: மக்களவையில் விஷ்ணு பிரசாத் எம்.பி. வலியுறுத்தல்

Published on

திண்டிவனத்தில் ஒப்புதல் பெறப்பட்ட இரண்டு புதிய ரயில் பாதைகளுக்கு நிதி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மீது ஆரணி தொகுதி எம்.பி.யான டாக்டர்.எம்.கே.விஷ்ணு பிரசாத் நேற்று மக்களவையில் பேசினார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான டாக்டர்.எம்.கே.விஷ்ணு பிரசாத் மக்களவையில் பேசியதாவது:

''திண்டிவனத்திலிருந்து நகரி மற்றும் திண்டிவனத்திலிருந்து திருவண்ணாமலைக்கு இரண்டு ரயில் இருப்புப்பாதை அமைக்கும் திட்டங்கள் ஒப்புதலாகிவிட்டன. அதன் திட்ட வரைவுகளை அரசிடம் கொடுத்துள்ளோம். ஆனால் இன்னமும் அதற்கான நிதி அரசிடமிருந்து பெறப்படவில்லை.

அரசு காலம் கடத்திக்கொண்டிருக்கிறது. கடந்த மாதம் கூட எதிர்பாராத விதமாக தெற்கு ரயில்வேயின் பொது மேளாலரிடம் சந்திப்பு நடைபெற்றபோது கூட இதைப்பற்றி விசாரித்தேன். இந்தத் திட்ட வரையறைகள் முடிந்து தற்போது பிரதமரின் கவனத்தில்தான் உள்ளது என்றும், மாநில அரசு இந்தத் திட்டத்திற்காக இதுவரை நிலம் கையகப்படுத்தப்படவில்லை எனவும் மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

எனவே, இந்தத் திட்டத்தை உடனே துரிதப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும். ஆரணி, திண்டிவனம் மற்றும் திருவண்ணாமலை பகுதி மக்கள் இதனால் பெரிதும் பயனடைவர்.

அதுமட்டுமில்லாமல் ரயில்வே துறைக்கும் இது இழப்பில்லாமல் லாபம் ஈட்டித் தரும் ஒரு பாதையாக அமையும்''.

இவ்வாறு ஆரணி தொகுதி எம்.பி. டாக்டர்.எம்.கே.விஷ்ணு பிரசாத் பேசினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in