

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அமைக்கப்படும் அறக்கட்டளையில் முக்கிய இடம் பெறுவதில் சாதுக்கள் இடையிலான போட்டி தொடர்கிறது. இதன் பழமையான 3-ல் ஒன்றான ஸ்ரீராமஜென்ம பூமி ராமாலயா அறக்கட்டளையும் கோயில் கட்டும் பொறுப்பை அளிக்கும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
அயோத்தி மீதான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 9 ஆம் தேதி இறுதித் தீர்ப்பை அளித்தது. இதில், பிரச்சினைக்குரிய நிலத்தை இந்துக்களுக்கு அளித்து அங்கு ராமர் கோயில் கட்ட அறக்கட்டளை அமைக்க வேண்டும் என மத்திய அரசிற்கு உத்தரவிட்டது. இதையடுத்து அந்த அறக்கட்டளையில் முக்கியத்துவம் பெற அயோத்தி சாதுக்கள் இடையே மோதல் கிளம்பியது. இதன் மீதான செய்தியை தொடர்ந்து ‘இந்து தமிழ்’ நாளேடு வெளியிட்டு வருகிறது.
இத்துடன், அந்த அறக்கட்டளையின் தலைமைப் பொறுப்பை அளிக்கும்படி ஸ்ரீராமஜென்ம பூமி நியாஸ் அறக்கட்டளையின் தலைவர் நிருத்திய கோபால் தாஸ் வலியுறுத்தி இருந்தார். இந்தப் போட்டியில் இரண்டாவதாக ராமாலாயா அறக்கட்டளையும் இணைந்துள்ளது.
இது குறித்து ராமாலயா அறக்கட்டளையின் செயலாளரான சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் உ.பி.யின் மீரட்டில் கூறும்போது, ''ராமர் கோயில் கட்ட புதிதாக ஒரு அறக்கட்டளை உருவாக மத்திய அரசிற்கு அதிகாரம் இல்லை. எனவே, அந்தப் பொறுப்பை அயோத்தியின் மூன்று பழமையான அறக்கட்டளைகளில் ஒன்றிடம் அளிப்பது பொருத்தமானது. இவற்றில் மிகவும் உகந்தது எங்கள் அறக்கட்டளை என்பதால் அப்பணியை ராமாலயாவிடம் வழங்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
ராமாலயாவிடம் கோயில் கட்டும் பொறுப்பை அளித்தால் இரண்டாவதான ஸ்ரீராமஜென்ம பூமி கோயில் அறக்கட்டளை மறுப்பு தெரிவிக்காது என அவிமுக்தேஷ்வரானந்த் கூறியுள்ளார். மேலும் அவர், மூன்றாவதான ஸ்ரீராமஜென்ம பூமி நியாஸ் அயோத்தி நிலம் கையகப்படுத்துவதற்கு முன்பாகத் தொடங்கியதால் அதற்கு கோயில் கட்டும் அதிகாரம் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவின் தோழமை அமைப்பான விஷ்வ இந்து பரிஷத்தால் 1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது ஸ்ரீராமஜென்ம பூமி நியாஸ். இதுவே ராமர் கோயில் கட்டுவதற்காக என அயோத்தியில் முதலாவதாக தொடங்கப்பட்ட அறக்கட்டளை ஆகும்.
1993 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்ட பின் ராமாலயா அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதில் நான்கு சங்கராச்சாரியார்கள், வைஷ்ணவாச்சாரியார்கள் மற்றும் சாதுக்களின் சபைகளான 13 அஹாடாக்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட அறக்கட்டளைகள்
மூன்றாவதாக துவக்கப்பட்டது மஹந்த் ஜன்மஜேயா சரண் எனும் சாதுவால் ஸ்ரீராமஜென்ம பூமி கோயில் அறக்கட்டளை. இதை தொடர்ந்து ராமர் கோயில் கட்டும் பெயரில் அயோத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அறக்கட்டளைகள் சாதுக்கள் மற்றும் ஆன்மீக சேவகர்களால் உருவாக்கப்பட்டுள்ளன.
அறக்கட்டளையில் வெளிப்படைத்தன்மை
இதனிடையே, அயோத்தி வழக்கின் முக்கிய மனுதாரரான நிர்மோஹி அஹாடா, அரசு அமைக்கும் அறக்கட்டளையில் தனக்கு முக்கிய நிர்வாகப் பொறுப்பை அளிக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு மனு அனுப்பி வலியுறுத்தியுள்ளது. கணக்கு வழக்குகளில் திருப்பதி பாலாஜி மற்றும் நிர்வாகிகள் அமைப்பதில் வைஷ்னோ தேவி கோயில்களை போல், ராமர் கோயில் அறக்கட்டளை வெளிப்படையாக இருக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.
80 சதவிகிதம் ராமானந்த் சாதுக்கள்
அரசின் அறக்கட்டளையில் 80 சதவிகிதம் ராமானந்த் சம்பிராதாய சாதுக்கள் இடம் பெற வேண்டும் எனவும், மீதியுள்ளவற்றில் உலகம் முழுவதிலும் உள்ள முக்கிய சாதுக்கள் சபையின் தலைவர்கள் சேர்க்கப்படவும் வலியுறுத்தி உள்ளது.
ஆர்.ஷபிமுன்னா