

சியாச்சின் மலைப்பகுதியில் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பலியானார்கள் என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள கரக்கோரம் பகுதியில் 20 ஆயிரம் அடி உயரத்தில் சியாச்சின் பனிமலை அமைந்துள்ளது. இது உலகிலேயே மிக அதிகமான உயரத்தில் அமைந்துள்ள ராணுவப் பகுதியாகும். மிக அதிகமான குளிர்காற்றில் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குளிர்காலத்தில் சியாச்சின் மலைப்பகுதியில் மைனஸ் 60 டிகிரியாக உறைநிலை இருக்கும். குளிர்காலத்தில் இங்கு அடிக்கடி நிலச்சரிவும் பனிச்சரிவும் ஏற்படுவது இயற்கை. ஆனால், இதில் சில நேரங்களில் ராணுவ வீரர்கள் சிக்கிவிடுகின்றனர்.
நேற்று மாலை 3 மணி அளவில் சியாச்சினில் பனிச்சரிவு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள், உதவியாளர்கள் ஏறக்குறைய 8 பேர் இந்தப் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து உடனடியாக பனிப்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபடும் திறன் பெற்ற மீட்புப் படையினர் வந்து பனிச்சரிவில் சிக்கி இருப்பவர்களை மீட்டனர். இதில் பனிச்சரிவில் சிக்கிய 8 பேரும் படுகாயமடைந்திருந்தனர்.
உடனடியாக அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, ஹெலிகாப்டர் மூலம் அருகில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் அதில் 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "கடல் மட்டத்திலிருந்து 19 ஆயிரம் அடி உயரத்தில் சியாச்சின் மலைப்பகுதி இருக்கிறது. அங்கு ஏற்பட்ட பனிச்சரிவில் 6 ராணுவ வீரர்கள், இரு உதவியாளர்கள் சிக்கிக் கொண்டார்கள். அவர்களை மீட்டு தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் மூச்சுத் திணறல் காரணமாக 4 வீரர்கள், 2 உதவியாளர்கள் உயிரிழந்தனர்" எனத் தெரிவித்தார்.