

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு பற்றி திமுக எம்.பி. கனிமொழி நேற்று மக்களவையில் பிரச்சினை எழுப்பினார். இந்த வழக்கில் சிக்காதபடி அதன் பேராசிரியர்களை காப்பாற்றி வருவது யார் எனவும் கனிமொழி கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் கனிமொழி பேசியதாவது:இந்தியாவின் உயர் கல்வி நிறுவனமான ஐஐடிகளில் கடந்த பத்து வருடங்களில் 52 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். மத்திய அமைச்சரே நாடாளுமன்றத்தில், உயர்கல்வித் துறையில் தீண்டாமைக் கொடுமை தொடர்பாக 72 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இது வெட்கக்கேடானது.
ஐஐடிகளில் நாம் என்ன கற்பிக்கிறோம்? இந்தக் கல்வி முறை எதை நோக்கிச் செல்கிறது? இப்போது சென்னை ஐஐடியில் பாத்திமா என்ற மாணவி மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அந்த மாணவியின் பெற்றோர் தங்கள் மகளின் அறைக்குச் செல்வதற்கு முன்பே அந்த அறை சுத்தமாக துடைக்கப்பட்டுவிட்டது என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த மாணவி தூக்கு மாட்டிக் கொண்டதாக சொல்லப்படும் கயிறு கூட அங்கிருந்து அகற்றப்பட்டுவிட்டது.
பாத்திமாவின் செல்போனில் ஸ்க்ரீன் சேவ் செய்யப்பட்டு சுட்டிக்காட்டப்பட்ட ஐஐடி பேராசிரியர்கள் மீது இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. அந்தப் பெண் குறிப்பிட்டுச் சுட்டிக் காட்டியிருக்கும் பேராசிரியர்களை வழக்கில் சிக்காமல் யார் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்? ஏன் அவர்கள் உடனடியாக விசாரணைக்கு அழைக்கப்படவில்லை? ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் என்னதான் நடந்துகொண்டிருக்கிறது?இப்படியே மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்வதால் ஐஐடி என்ற உயர் கல்வி நிறுவனத்தின் மாண்பு சிதைந்துகொண்டே வருகிறது. கல்வி நிலையம் என்பது இதுபோன்ற மதத் தீண்டாமை கடைபிடிக்கும் இடமாக மாறக் கூடாது. இது தொடர்ந்தால் உயர் கல்வி நிறுவனங்களே தொடர்ந்து செயல்பட முடியாது.
இவ்வாறு கனிமொழி பேசினார்.
தற்கொலை செய்துகொண்ட ஐஐடி மாணவி பாத்திமாவின் பெற்றோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்தனர். அப்போது, ‘இந்த விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தில் திமுக குரல் எழுப்பும்’ என்று ஸ்டாலின் கூறியது குறிப்பிடத்தக்கது.