Published : 19 Nov 2019 08:22 AM
Last Updated : 19 Nov 2019 08:22 AM

சீனாவுடன் ராஜபக்ச சகோதரர்கள் நெருக்கம்: கடல்சார் பாதுகாப்பில் சிக்கல் ஏற்படும் என இந்தியா கவலை

இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சவுக்கு வாழ்த்துகளை இந்தியா தெரிவித்துள்ளபோதிலும், சீன நாட்டுடன் ராஜபக்ச சகோதரர்கள் தொடர்ந்து தொடர்பு வைத்திருப்பதற்கு கவலை தெரிவிக்கும் நிலையில் உள்ளது.

இலங்கை அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார். அவர் நேற்று அதிபராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் கோத்தபய வெற்றி பெற்றதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு உதவியதன் மூலம் அந்நாட்டை தம் பக்கமும் தக்க வைக்க முயற்சிகளை இந்தியா மேற்கொண்டது. அதேநேரத்தில் இலங்கையில் பெருமளவு தொழில் முதலீடுகளை கொட்டி சீனாவும் வேரூன்றி நின்றது. குறிப்பாக அதிபராக மகிந்த ராஜபக்ச இருந்த காலத்தில் சீனாவுக்கு சிவப்புக் கம்பளம் தென் இலங்கை முழுவதும் விரிக்கப்பட்டது. அதிக அளவில் முதலீடுகளை இலங்கையில் செய்தது சீனா. ஹம்பந்தோட்டாவில் துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை செய்தது சீனா.

சீனாவுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தவர் மகிந்த ராஜபக்ச என்ற ஒரே காரணத்துக்காகவே 2015 அதிபர் தேர்தலின்போது இந்தியா தலையிட்டது என்று கூறலாம். அதனால் 2015 தேர்தலில் மைத்ரிபால சிறிசேனா பக்கம் இந்தியா நின்றது. இதனால் தோல்வியைத் தழுவிய மகிந்த ராஜபக்ச பலமுறை இந்தியாதான் தமது தோல்விக்குக் காரணம் என கூறியிருக்கிறார்.

இந்நிலையில் ராஜபக்சவின் சகோதரரான, கோத்தபய ராஜபக்ச அதிபராக வெற்றி பெற்றுள்ளது இந்தியாவை கவலை கொள்ளச் செய்துள்ளது. முன்பு, இலங்கைக்கு ஜப்பான் நாடுதான் அதிக உதவிகளைச் செய்தது. தற்போது அதைக் காட்டிலும் அதிக அளவில் இலங்கைக்கு சீனா உதவிகளை வழங்கியுள்ளது. மகிந்த ராஜபக்ச, கோத்தபய ராஜபக்ச சகோதரர்கள் தொடர்ந்து சீனாவுடன் தொடர்பு வைத்துள்ளது குறித்தே இந்தியா தனது கவலையைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசியல் விமர்சகரான பிரம்மா செல்லானே கூறும்போது, “நேபாள நாட்டில் சீனாவுக்கு ஆதரவான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைந்துள்ளது. இது இந்தியாவுக்கு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. அதைப் போலவே இலங்கையில் ராஜபக்ச குடும்ப ஆட்சி மீண்டும் வந்துள்ளதால், இந்தியாவுக்கு மேலும் சில சிக்கல்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடல்சார் பாதுகாப்பிலும் சிக்கல் ஏற்படும். ஏற்கெனவே இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று இந்தியாவிடம் இலங்கை தெரிவித்துள்ளது. 2015-ம் ஆண்டு தேர்தலின்போதே இது வெளிப்பட்டது.

தற்போது கோத்தபய அதிபரானதால், நாட்டின் பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்பதற்கும் வாய்ப்பு உள்ளது. இருவருமே, சீன அரசுக்கு நெருக்கமானவர்கள் என்பதும், அவர்கள் தொடர்ந்து சீனாவுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதும் இந்தியாவின் கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x