Published : 19 Nov 2019 08:21 AM
Last Updated : 19 Nov 2019 08:21 AM

சோனியா காந்தியுடன் சரத் பவார் சந்திப்பு: மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை

மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று சந்தித்துப் பேசினார். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 105, அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 தொகுதிகளில் வெற்றி பெற்றன. காங்கிரஸுக்கு 44, அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸுக்கு 54 தொகுதிகள் கிடைத்தன.

சுழற்சி முறையில் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா கோரியதை பாஜக ஏற்காததால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. புதிய அரசு அமைப்பது தொடர்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியுடன் சிவசேனா பேச்சுவார்த்தை நடத்தியது. ஆட்சி அமைக்க வருமாறு பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸுக்கு ஆளுநர் அடுத்தடுத்து அழைப்பு விடுத்தார். எந்த கட்சியும் ஆட்சியமைக்க தேவையான எம்எல்ஏக்களின் பட்டியலை அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஆளுநரின் பரிந்துரையை ஏற்று கடந்த 12-ம் தேதி அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைப்போம் என்று சிவசேனா பகிரங்கமாக அறிவித்தது. ஆனால் 3 கட்சிகளிடையே இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். முன்னதாக சரத் பவார் நிருபர்களிடம் கூறும்போது, "மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனா ஓர் அணியாகவும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் எதிரணியாகவும் போட்டியிட்டோம். அவர்கள் (பாஜக-சிவசேனா) தங்கள் பாதையை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும். எங்கள் கொள்கையின் அடிப்படையில் நாங்கள் அரசியல் நடத்துவோம்" என்று தெரிவித்தார்.

சோனியா காந்தியை சந்தித்த பிறகு சரத் பவார் நிருபர்களிடம் கூறியதாவது: மகாராஷ்டிர அரசியல் நிலவரம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அந்த கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனி ஆகியோருடன் விரிவான ஆலோசனை நடத்தினேன். காங்கிரஸில் இருந்து 4 பேர், தேசியவாத காங்கிரஸில் இருந்து 4 பேர் அடங்கிய குழு விரைவில் சந்தித்து ஆலோசனை நடத்தும். இப்போதைய நிலையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தவில்லை. பெரும்பான்மை பலம் குறித்து மட்டுமே விவாதித்தோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x