

தமிழ்நாட்டிலும் உத்தரப் பிரதேசத்திலும் இரண்டு பாதுகாப்பு தளவாடங்களுக்கான சாலைகள் அமைக்க மத்திய அரசு விரும்புகிறது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
தாய்லாந்தின் பாங்காங் நகரில் இந்திய வர்த்தக சபை ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து கண்காட்சியில் மேலெழும் இந்தியா எனும் வணிகக் கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
''2025-ம் ஆண்டுக்குள் பாதுகாப்புத் தொழில் துறையில் 26 பில்லியன் முதலீடு என்ற இலக்கை எட்டும். இதுதான் மத்திய அரசின் நிலை. இறக்குமதிகளை நம்பி இருப்பதைக் குறைப்பதற்கு இந்தியாவில் உற்பத்தி என்ற திட்டத்தின் கீழ், பாதுகாப்புத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் முக்கிய குவி மையமாக இந்தியாவில் உற்பத்தித் திட்டம் உள்ளது.
பாதுகாப்பு உற்பத்திக்கான நகல் கொள்கை 2018-ன் கீழ், 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பாதுகாப்பு துறை சார்ந்த ஏற்றுமதியை 5 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஒரு பக்கத்தில் இந்த இலக்கு லட்சியமாக இருக்கும்போது, கடந்த இரண்டாண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி ஏறத்தாழ ஆறு மடங்கு அதிகரித்திருப்பது ஊக்கமளிப்பதாக உள்ளது.
2025-ம் ஆண்டுக்குள் விண்வெளி ஆய்வு, பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் சேவைகளில் 10 பில்லியன் டாலர் முதலீடு கிடைக்கும். இதன் மூலம் இரண்டு முதல் மூன்று மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தமிழ்நாட்டிலும், உத்தரப் பிரதேசத்திலும் இரண்டு பாதுகாப்பு தளவாடங்களுக்கான சாலைகள் அமைக்க அரசு விரும்புகிறது. ஏற்கெனவே கோயம்புத்தூரில் பாதுகாப்புத் துறையில் புதிய கண்டுபிடிப்புக்கான தொழிற்கூடம் செயல்படத் தொடங்கியுள்ளது. பாதுகாப்புக்கான திட்டமிடல் குழு உருவாக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச அரசு உத்தேச புந்தேல்கண்ட் விரைவுச் சாலையோடு பாதுகாப்புத் தளவாடங்கள் கொண்டு செல்வதற்கான பாதை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இது பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் இந்தியாவை தற்சார்புடையதாக்க உதவும்''.
இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் 2020-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ள பாதுகாப்பு தொழில் கண்காட்சியில் பங்கேற்க வருமாறு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் முதலீட்டாளர்களுக்கு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்தார்.